கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது.
இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா என்பதை மாநில காவல் துறை தலைவர் ஹசானி கசாலி கூறவில்லை.
“ஆம் … இன்று காலை எனது அதிகாரி அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்,” என்று அவர் தி ஸ்டார் செய்தித்தளத்திடம் கூறினார்.
மலேசியரான யோங், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஜிண்டாய் எண்டர்பிரைஸ் டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
ஆரம்ப அறிக்கையின்படி, யோங் ஆரம்பத்தில் சினோவாக் தடுப்பூசியை சபா மாநில அரசுக்கு வழங்க முன்வந்தார். இருப்பினும், இந்த தடுப்பூசிக்கு மலேசியா ஒப்புதல் அளிக்கவில்லை என்ற அடிப்படையில் மாநில அரசு பங்களிப்பை நிராகரித்தது. பின்னர், அவர் பினாங்கு அரசாங்கத்திற்கு உதவ முன்வந்தார்.