Home நாடு “நம்பிக்கைகளுக்கு ஏற்ப சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன்” – விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை

“நம்பிக்கைகளுக்கு ஏற்ப சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன்” – விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை

636
0
SHARE
Ad

மஇகாவின் தேசியத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் நன்றி அறிக்கை

மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு என்னை பெரும்பான்மையான மஇகா கிளைகள் மீண்டும் 3 ஆண்டு காலத் தவணைக்கு தேர்ந்தெடுத்திருப்பதற்கு அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை நாடு தழுவிய அளவில் 3,620 கிளைகள் முன்மொழிந்து, வழிமொழிந்திருக்கின்றன என்ற தகவல் எனக்குப் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

விக்னேஸ்வரன் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கும் ராஜூ

அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக மஇகா தேசியத் தலைவராக நான் வழங்கி வந்திருக்கும் சேவைகள், எனது தலைமைத்துவ பாணி, கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் நான் முன்னெடுத்த பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் என்னை மீண்டும் கட்சியினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன்.

#TamilSchoolmychoice

மஇகாவினர் அனைவரும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப எனது கட்சி, சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து நான் மேலும் உற்சாகத்துடன் வழிநடத்துவேன் என இந்த வேளையில் உறுதி கூறுகிறேன்.

கட்சியினரின் இத்தகைய ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பதால் தொடர்ந்து நான் கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் துணிச்சலுடன் போராடுவதற்கான வலிமையும், உத்வேகமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

வாழ்த்து தெரிவிக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

நான் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மஇகா கிளைத் தலைவர்கள் மட்டுமின்றி, மஇகா தொகுதிகள் காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மாநில, தேசிய நிலையிலான மஇகா தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கட்சியின் சார்பாக எனக்கு வழங்கிய ஆதரவுதான் காரணம் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

அவர்களுக்கும் இந்த வேளையில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மஇகா என்ற அரசியல் கட்சி வெறும் அரசியலுக்காக உருவான கட்சியல்ல. மாறாக, நமது மலேசிய இந்திய சமுதாயத்திற்காகப் போராடுவதற்காக, பாடுபடுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி. எனவே, நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஆதரவும் ஒரு காரணம் என்பதையும் நான் மறந்து விடப் போவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் எனது தலைமைத்துவம் இருக்கும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றங்களினால், நமது கட்சியும், சமுதாயமும் எதிர்நோக்கியிருக்கும் சவால்களும், பிரச்சனைகளும் மாறுபட்டவை, வித்தியாசமானவை என்பதையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

வேட்புமனுத் தாக்கலின்போது விக்னேஸ்வரன்…

அதற்கேற்ப எனது தலைமைத்துவமும் அமைந்திருக்கும். முதல் கட்டமாக மஇகாவை சமுதாயம் சார்ந்த, சமுதாய உணர்வுகளோடு இணைந்து இயங்கும் கட்சியாக தொடர்ந்து வழிநடத்துவேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது, அதன்மூலம் மேலும் கூடுதலான சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றி கொள்வது ஆகிய இலக்குகளை எனது முதன்மை நோக்கங்களாகக் கொண்டுள்ளேன்.

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்க உதவிகள் உரிய முறையில், பொருத்தமானவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் சென்றடைவதை நான் உறுதிப்படுத்துவேன்.

மேலும் அரசாங்க இலாகாக்களிலும், அரசாங்கப் பதவிகளிலும், இந்தியர்களுக்குரிய விழுக்காட்டுக்கு ஏற்ப உரிய சலுகைகள், உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதையும் நான் எனது தலைமைத்துவக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன்.

நமது சமுதாயம் தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கான ஒரே வழி கல்விதான். மஇகா, எம்ஐஇடி வழியாக கல்விப் பணிகளையும், நமது உயர்கல்வி அமைப்புகளையும் தரமானதாகவும், சிறந்தவையாகவும் உருவாக்கப் பாடுபடுவேன். அதே வேளையில் அரசாங்கத்தின் மூலமாக நமது சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய மெட்ரிகுலேஷன், உபகாரச் சம்பளம் போன்ற கல்வி வாய்ப்புகளும், பொதுப் பல்கலைக் கழக நுழைவு வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவதை நானும் நமது கட்சியினரும் உறுதி செய்வோம்.

கட்சியினர், சமுதாயத்தினர், இயக்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் நானும் எனது தலைமைத்துவக் குழுவினரும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவிருக்கும் முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் துணை நிற்பீர்கள், தோள்கொடுப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

மீண்டும் நன்றியுடன்,

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்