(தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான கலைஞர் மு.கருணாநிதி 1987-இல் முதன் முதலாக மலேசியாவுக்கு வருகை தந்தார். அந்த வருகை குறித்த சில விவரங்களை நினைவு கூர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். நேற்று வியாழக்கிழமை (ஜூன் 3) கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லியல் யூடியூப் தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)
ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள். அவரை நினைவுகூரும் வகையில் அவர் மலேசியாவுக்கு முதல் வருகை எப்போது நிகழ்ந்தது, ஏன் அவர் நம் நாட்டுக்கு வந்தார், அவர் வந்தபோது நடைபெற்ற சில சுவாரசிய சம்பவங்கள் போன்ற விவரங்களைப் பார்ப்போம்.
1987-ஆம் ஆண்டில் 6-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நவம்பர் 15 முதல் 19 வரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அதன் ஏற்பாட்டுக் குழுத்தலைவராக பொதுப்பணி அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான துன் சாமிவேலு தலைமையேற்றிருந்தார்.
ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர்களாக மஇகா தேசியத் துணைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனநாயக செயல்கட்சியின் டாக்டர் வி.டேவிட் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாட்டுக் குழுவின் செயலாளராக பேராசிரியர் டான்ஸ்ரீ டி.மாரிமுத்து பணியாற்றினார்.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.
சென்னைக்கு சென்று, தமிழக முதலமைச்சரான எம்ஜிஆரை நேரில் சந்தித்து மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் சாமிவேலு. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் மாநாட்டிற்கு வர முடியாது என்று கூறிவிட்டார்.
“தாங்கள் வர இயலாவிட்டால் தமிழ் நாடு அரசாங்கம் சார்பாக அதிகாரத்துவ பிரதிநிதிகளை அனுப்புங்கள்” என வேண்டுகோள் விடுத்தார் சாமிவேலு.
ஏனோ சில காரணங்களால் அதிகாரத்துவ பிரதிநிதிகளையும் எம்ஜிஆர் அனுப்ப வில்லை.
“தமிழினத் தலைவர் என்ற முறையில் அழைக்கிறேன்” என கருணாநிதியையும் தனது சென்னை வருகையின்போது நேரில் சந்தித்து மாநாட்டுக்கு வர அழைப்பு விடுத்தார் சாமிவேலு.
எம்ஜிஆர், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரப் போவதில்லை என்பது உறுதியான பின்னர், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று கோலாலம்பூர் வந்தார் கருணாநிதி. அவருக்கு அதுதான் முதல் மலேசிய வருகை.
தமிழ் நாடு அரசாங்கப் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக வரவில்லை என்றாலும், அங்கிருந்து கணிசமான பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும், பார்வையாளர்களும் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.
கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்ள கோலாலம்பூர் செல்கிறார் என்ற அறிவிப்பு மாநாட்டுக்கு முதல் நாள் தமிழக ஊடகங்களில் வெளியானது.
மாநாடு நடைபெற்ற முதல் நாள் இரவு அதாவது நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் ஏறினார் கலைஞர். மாநாடு நடைபெற்ற நாளன்று அதிகாலை 5.00 மணியளவில் நமது பழைய சுபாங் விமான நிலையம் வந்திறங்கினார். மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவினரில் சில பிரமுகர்கள் அவரை நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்பு நல்கினர்.
அவருடன் திமுகவின் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியும் உடன் வந்திருந்தார்.
கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் இருந்த பழைய ஹில்டன் தங்கும் விடுதியில் கலைஞர் தங்க வைக்கப்பட்டார். விமான நிலையத்திலிருந்து நேராக அங்கு சென்று ஓய்வெடுத்த பின்னர் அன்று காலையில் அதாவது நவம்பர் 15-ஆம் தேதி காலையில் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற மாநாட்டு திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் கலைஞர்.
மாநாட்டை அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முகமட் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மாநாட்டுத் திறப்பு விழாவில் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் பேராளர்களும் மட்டுமே கலந்து கொண்டதால் திறப்பு விழாவில் கலைஞரின் உரையைக் கேட்க பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதற்காக அன்று மாலையே அதே புத்ரா உலக வாணிப மண்டபத்தில் பொதுமக்களுக்காக கலைஞரின் பொது உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கலைஞரின் உரையைக் கேட்கவும் அவரைக் காணவும் அரங்கம் நிரம்பி வழிந்தது.
மலேசியத் தமிழர்கள் என்றும் நினைவுகூரும் வண்ணம் உணர்ச்சிமிக்க உரையொன்றை வழக்கம்போல் ஆற்றினார் கலைஞர்.
“குடிசைதான் ஒருபுறம்” என்ற அவரின் புறநானூற்றுப் பாடலை உருமாற்றி அவர் வடித்திருந்த கவிதை வரிகளை மேடையில் தனக்கே உரிய கரகரத்த குரலில் அவர் கூறி முடித்தார்.
கவிதையை முடிக்கும்போது அவர் கூறிய முத்தாய்ப்பு வரிகள்தான் அரங்கம் மீண்டும் ஒருமுறை கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்க காரணமாக அமைந்தது.
கவிதையைக் கூறி முடித்ததும் “இன்றைக்கு அந்த புறநானூற்றுத்தமிழன் எங்கிருக்கிறான் தெரியுமா?” என்று கூறி நிறுத்தினார் கலைஞர். சில வினாடிகள் இடைவெளிக்குப் பின்னர் அவரே பதிலளித்தார்.
“அந்த புறநானூற்றுத் தமிழன் இன்றைக்கு இலங்கையில் இருக்கிறான்” என்று கூறி முடித்தபோது எழுந்த கரவொலிகளின் ஓசை அடங்க நீண்ட நேரமானது.
அப்போது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான போர் உக்கிரமாக, உச்சக் கட்டத்தை அடைந்திருந்த நேரம். அதனால் அவரின் அந்த வரிகள் அனைவரையும் உணர்ச்சி வசப்படச் செய்தன.
அதே உரையில்தான் தமிழகத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய மருது சகோதரர்களில் சின்ன மருதுவின் மகனான துரைசாமி மேலும் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களுடன் வெள்ளையர்களால் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவத்தை உணர்ச்சியுடன் விவரித்தார் கலைஞர்.
பினாங்கில் சிறைவாசம் அனுபவித்த துரைசாமி பின்னர் தன்னை நாடு கடத்திய வெல்ஷ் என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயத் தளபதியை பினாங்கில் சந்தித்தார் என்ற விவரத்தையும் நூல் ஒன்றில் காணப்பட்ட குறிப்போடு விவரித்தார் கருணாநிதி.
வரலாற்று ஏடுகளில் புதைந்து கிடந்த அந்த அரிய தகவல் அப்போதுதான் பொதுவெளிக்கு வந்தது. பல மலேசியத் தமிழர்களும் அதுபற்றித் தெரிந்து கொண்டனர்.
மாலையில் உரையாற்றி முடித்த பின்னர் பிரமுகர்களுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு திரும்பினார் கலைஞர்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது தமிழ்நாட்டிலும் சில அரசியல் சிக்கல்கள், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்ததால் உடனடியாக அவர் தமிழ்நாடு திரும்ப வேண்டியிருந்தது.
தனது முதல் வருகையின்போது மொத்தமாக கலைஞர் கோலாலம்பூரில் இருந்தது ஒன்றரை நாட்கள்தான். ஆனால், அவரின் வருகையும், உணர்ச்சி மிகுந்த உரையும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு எழுச்சியையும், பெருமையையும் சேர்த்தது. இன்றுவரையில் நடத்தப்பட்ட பல உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் மிகச் சிறந்த மாநாடுகளில் ஒன்றாக கோலாலம்பூரில் நடைபெற்ற 6-வது மாநாடு சிறப்பித்துக் கூறப்படுகிறது.
1989-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்றது.12 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் முதலமைச்சரானார் கலைஞர் கருணாநிதி.