கோலாலம்பூர்: இதற்கு முன்னர் ஒத்திவைக்கப்பட்ட 15- வது பிகேஆர் தேசிய ஆண்டு கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாநாடு முழுவதுமாக இயங்கலையில் நடைபெறும் என்றும், 2,000 பிரதிநிதிகள் தங்கள் வீடுகளிலிருந்து சூம் செயலி மூலம் பங்கேற்பார்கள் என்றும் பிகேஆர் அமைப்பு செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்தார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பதிவுசெய்யப்பட்ட அமைப்புகளின் பொதுக் கூட்டங்கள் குறித்து ஜூன் 9-ஆம் தேதி சங்கப் பதிவாளர் கடிதத்தை அடுத்து, இந்த மாநாட்டை இயங்கலையில் நடத்த பிகேஆர் முடிவு செய்தது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். .
கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் மக்கள் இந்த நிகழ்வைக் காணலாம் என்று அவர் கூறினார்.
“இந்த மாநாடு நமது நாட்டில் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தும்,” என்று அவர் கூறினார்.