Home நாடு “துன் சம்பந்தனின் சேவைகளையும், அரசியல் பங்களிப்பையும் போற்றுவோம்!” – விக்னேஸ்வரன்

“துன் சம்பந்தனின் சேவைகளையும், அரசியல் பங்களிப்பையும் போற்றுவோம்!” – விக்னேஸ்வரன்

887
0
SHARE
Ad

துன் சம்பந்தன் அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 16) முன்னிட்டு அவரின் சாதனைகளையும் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை

ஜூன் 16, நமது மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய துன் சம்பந்தன் அவர்களின் பிறந்த நாள்.

அவர் தனது தலைமைத்துவக் காலத்தில் ஆற்றிய சேவைகளையும், முன்னெடுத்த சாதனைகளையும், நமக்காக விட்டுச் சென்றிருக்கும் சில அடையாளங்களையும் அவரின் பிறந்த நாளில் நாம் நினைவு கூர்வதும் போற்றுவதும் பொருத்தமாக இருக்கும்.

அவரின் தலைமைத்துவ சாதனைகளில் முதன்மை பெறுவதும் முக்கியமாகக் கருதப்படுவதும் மஇகாவை சுமார் 18 ஆண்டுகாலம் வழி நடத்திய அவரின் தலைமைத்துவ ஆற்றல்தான்.

#TamilSchoolmychoice

1955-ஆம் ஆண்டில் அவர் மஇகாவின் 5-வது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றதும் அவர் செய்த முதல் பணி மஇகாவை மக்கள் இயக்கமாக, சமுதாய இயக்கமாக உருமாற்றியதுதான்.

மஇகா அனைத்து இந்தியர்களுக்கும் உரியது என்பதை மறுஉறுதிப்படுத்திய சம்பந்தன், மலேசியாவின் இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பதை உணர்ந்து, மஇகாவை தமிழர்களிடையே அவர்களின் அரசியல் பாதுகாவலனாகக் கொண்டு செல்ல அரும்பாடுபட்டார். தமிழ் மொழியின் பயன்பாட்டையும் கட்சியின் அனைத்து நிலைகளிலும் கொண்டு வந்தார்.

அதன் காரணமாகவே, மஇகா பெரும்பான்மை இந்தியர்களிடையே ஊடுருவி, அவர்களிடையே ஆதரவு பெற்று, வெற்றிகரமான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.

அந்த அடிப்படையில்தான், மலாயாவுக்கான சுதந்திரத்தை பிரிட்டனிடமிருந்து பெற இந்திய சமூகத்தின் ஏகோபித்த பிரதிநிதியாக மஇகா பங்கு பெறவும் முடிந்தது.

மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்திய சமூகத்திற்கான உரிமைகளும், சலுகைகளும் இடம் பெற சம்பந்தன் பாடுபட்டார். போராடினார்.

அதன் காரணமாகவே, இன்று வரை அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் நாம் தமிழ்மொழி, தமிழ்ப் பள்ளிகள், இந்து ஆலயங்கள், மத சுதந்திரம், குடியுரிமை என பல உரிமைகளைப் பெற்றிருக்கிறோம்.

மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்டு துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான அலையன்ஸ் கூட்டணியில் அம்னோ, மசீசவுடன் மஇகாவையும் இணைத்தார் சம்பந்தன். அதன் காரணமாகவே, அடுத்த 60 ஆண்டுகளுக்கு மலேசிய அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் பங்கு கொண்டு மஇகா தலைவர்கள் எத்தனையோ வாய்ப்புகளையும், உரிமைகளையும், சலுகைகளையும் இந்திய சமூகத்திற்காக பெற்றுத் தர முடிந்தது.

இன்று ஒரு சிலர் மிகச் சாதாரணமாக மஇகாவையும், அதன் முன்னாள் தலைவர்களையும் குறை கூறலாம். ஆனால், மலாயா சுதந்திரம் பெற்ற அந்த சிக்கல் மிகுந்த காலகட்டத்தில்  இன, மத, மொழி, குடியுரிமை ரீதியான பிரச்சனைகளை இலாவகமாகக் கையாண்டு, பேச்சுவார்த்தைகளின் மூலம் அதற்கு தீர்வு கண்டு, மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் அதை இடம் பெறச் செய்ய தனித்துவமிக்க தலைமைத்துவ ஆற்றல் வேண்டும்.

அந்த ஆற்றல் துன் சம்பந்தனிடம் இருந்தது. அதனால்தான் இன்றுவரை நாம் உரிமை பெற்ற சமுதாயமாக நமது நாட்டில் வாழ முடிகிறது.

அதுமட்டுமின்றி மஇகாவை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, 1969-ஆம் ஆண்டிலேயே நமது கட்சிக்கு 7 மாடிக் கட்டடத்தை நிறுவியவர் துன் சம்பந்தன்.

18 ஆண்டுகாலம் மஇகாவை வழிநடத்திய பின்னர் தலைமைப் பொறுப்பை டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்திற்கு விட்டுக் கொடுத்தார் சம்பந்தன்.

எனவே, நாட்டின் வரலாற்றில், முக்கியமான காலகட்டத்தில் சம்பந்தனின் அரசியல் பங்களிப்புதான் அவரை மற்ற தலைவர்களிடம் இருந்து தனித்துவமிக்க ஆற்றல் பெற்ற தலைவராக உயர்த்திக் காட்டுகிறது.

சம்பந்தனின் இரண்டாவது மிகப் பெரிய பங்களிப்பு – தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்

இன்று நாட்டிலேயே மிகப் பெரிய கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாகத் திகழ்வது தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். ஏராளமான சொத்துகளுடன் நாட்டின் மையத்தில் வானைத் தொட்டு நிற்கும் உயர்ந்த கட்டடம் ஒன்றை தமிழ் எழுத்துகளுடன் தாங்கி நிற்கும் இயக்கம் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்.

பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் கொண்ட கூட்டுறவு இயக்கம் இது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தைப் பொருத்தமான நேரத்தில் தோற்றுவித்து, மக்களின் சொத்தாக இன்று அதனை விட்டுச் சென்றிருக்கிறார் துன் சம்பந்தன்.

ஊர் ஊராகச் சென்று, வீதி வீதியாக அலைந்து, பத்துப் பத்து வெள்ளியாக சிறுகச் சிறுகச் சேர்த்து, தனது அயராத உழைப்பால் அவர் உருவாக்கிய கூட்டுறவு சங்கம் என்றுமே அவர் பெயரைச் சொல்லும்.

அதைவிட முக்கியமாக, 1960-ஆம் ஆண்டுகளில் நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்த தோட்டத் துண்டாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அவர் உருவாக்கியதுதான் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்.

இப்படியாகத் தான் தலைவராக இருந்த காலகட்டத்தில் சமுதாயத்திற்காகவும், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் சிந்தித்து அதற்காகப் பாடுபட்டு தீர்வுகளைக் கண்டவர்  துன் சம்பந்தன்.

சம்பந்தனின் வாழ்க்கையில் இருந்தும் தலைமைத்துவப் பண்புகளில் இருந்தும் இன்றைய இளைய சமுதாயத்தினர் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள் நிறைய இருக்கின்றன.

மக்கள் சேவையாளர்கள், தன்னலம் கருதாது சமுதாயத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்கள்,  அதற்காக உழைத்தவர்கள் என்றுமே மறக்கப்பட மாட்டார்கள், வரலாற்றில் நின்று நிலைப்பார்கள் என்பதுதான் அவரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்குக் கற்றுத் தரும் பாடம்.

அதற்கான சிறந்த உதாரணம் துன் சம்பந்தன் அவர்கள்.

அதனால்தான் ஆண்டுகள் பல நடந்தும் இன்று அவரின் பிறந்த நாளில் அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அவரின் பங்களிப்புக்காகப் போற்றி வணங்குகிறோம்.

இதைத்தான் இன்றைய இளைஞர்களும் நினைவில் கொண்டு அரசியல் ரீதியாகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபட முன்வர வேண்டும் என்றும் இந்த வேளையில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்,
மலேசிய இந்தியர் காங்கிரஸ்