சென்னை: தன்னைத் தானே ஆன்மீகத் தலைவர் எனக் கூறிக் கொண்டு உலா வந்த சிவசங்கர்பாபா சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவியருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்தாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் வட்டாரத்தில் சுஷில் ஹரி என்ற பெயரிலான தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றை நிறுவி சிவசங்கர் பாபா நடத்தி வந்தார்.
புகார்களைத் தொடர்ந்து திடீரென சிவசங்கர்பாபாவும் தலைமறைவானார். அவர் வடநாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது.
தமிழகக் காவல் துறை அவர் மீதான வழக்கை சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றியது.
வட நாட்டில் சிவசங்கர் பாபா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் நாள் அவர் டில்லி அருகே கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டார்.
சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஜூன் 18-ஆம் நாள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இருதயவியல் பிரிவில் சிவசங்கர் பாபா உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை அவருக்கான சிகிச்சை நிறைவு பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற மருத்துவர்கள் அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.