Home நாடு ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : அரை இறுதிப் போட்டிகளுக்கு தேர்வான மலேசிய இணை!

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : அரை இறுதிப் போட்டிகளுக்கு தேர்வான மலேசிய இணை!

892
0
SHARE
Ad
ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை

தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் பதக்கம் பெறும் மலேசியாவின் நம்பிக்கை இன்னும் அணையாமல் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) காலையில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை இந்தோனிசியாவின் முன்னணி இரட்டையர் விளையாட்டாளர்களான கே.சுகாமுலியோ-எம்.கிடியோன் இணையை தோற்கடித்தனர்.

உலகத் தர வரிசையில் முதல் நிலையில் திகழும் இரட்டையர் ஆட்டக்காரர்களாகக் கருதப்படும் இந்தோனிசிய இணையை தோற்கடித்ததன் மூலம் அனைவரையும் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். மலேசியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

21-14, 21-17 புள்ளிகளில் இரண்டே ஆட்டங்களில் இந்தோனிசியர்களை வீழ்த்தி ஆரோன் சியா – சோ வூய் யிக் சாதனை புரிந்திருக்கின்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரை இறுதிப் போட்டிக்கு ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை தேர்வாகியிருக்கின்றனர்.

மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஆட்டக்காரர்களான ஆரோன் சியா – சோ வூய் யிக் இருவரும் குழு பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், தங்களின் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்து அவர்கள் பங்கேற்ற மூன்றாவது ஆட்டத்தில் சிறந்த முறையில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் கனடாவின் இணையை அவர்கள் எளிதாகத் தோற்கடித்தனர்.

அதன் மூலம் அவர்கள் இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினர்.

இன்றைய கால் இறுதி ஆட்டத்தில் இந்தோனிசியாவின் முன்னணி இரட்டையர் விளையாட்டாளர்களான கே.சுகாமுலியோ-எம்.கிடியோன் இணையைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்தில் நுழைவதன் மூலம் பூப்பந்து போட்டிகளில் பதக்கம் பெறும் மலேசியாவின் நம்பிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.