Home நாடு தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார் – மாமன்னர் காட்டம்

தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார் – மாமன்னர் காட்டம்

835
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று காலை தொடங்கி நிகழ்ந்துள்ளன.

சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் தன்னை அவமதித்து விட்டார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் காட்டமான, கடுமையான அறிக்கை ஒன்றை இன்று (வியாழக்கிழமை ஜூலை 29) காலை வெளியிட்டிருக்கிறார்.

மாமன்னரின் சார்பில் அரண்மனைக் காப்பாளர் டத்தோ இண்ட்ரா அகமட் பாடில் ஷாம்சுடின் அந்த அறிக்கையை வெளியிட்டார். இஸ்தானா நெகாரா முகநூல் பக்கத்தில் அந்த அறிக்கை பதிவிடப்பட்டது.

#TamilSchoolmychoice

திங்கட்கிழமையன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் அவசரச் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற விவாதங்கள் அமளியோடு நடைபெற்று வருகின்றன.

ஜூலை 21-ஆம் தேதியே அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டு விட்டதாக தக்கியூடின் அறிவித்தார். எனினும் இந்த முடிவுக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புத்திக் கேட்டு வந்தாலும் தக்கியூடின் அது குறித்து பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில் அவசர கால சட்டங்கள் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு தக்கியூடின் ஹாசான் எதிர்வரும் திங்கட்கிழமை பதிலளிப்பார் என நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசார் ஹாருண் அறிவித்தார் .

இதற்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். காரணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவசர கால சட்டங்கள் முடிவுக்கு வந்து விடும் என்பதால் திங்கட்கிழமை விளக்கம் கொடுப்பது என்பது சரியல்ல என அவர்கள் விவாதித்தனர்.

மாமன்னரின் ஒப்புதல் பெறப்பட்டதா இல்லையா என்பதை மட்டும் தெளிவுபடுத்துங்கள் என்று கூறினாலும் அரசாங்கமும், அமைச்சர் தக்கியூடின் ஹாசானும் இந்தக் கேள்வியை இன்று வரையில் தவிர்த்து வந்தனர்.

மாமன்னரின் அறிக்கை தெரிவிப்பது என்ன?

இந்த சூழ்நிலையில்தான் இன்று மாமன்னரின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

ஜூலை 24-ஆம் தேதி தன்னை சந்தித்த தக்கியூடின் ஹாசான், சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் இருவரும் ஜூலை 26-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவசர கால சட்டங்களை விவாதங்களுக்காக சமர்ப்பிப்போம் என உறுதியளித்திருந்தனர்.

எனினும் அவ்வாறு செய்யாமல், அந்த சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பதால் அவர்கள் மீது நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன் என காட்டமாக தனது அறிக்கையில் மாமன்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றத்தில் கூறியது உண்மையல்ல, மாறாக அவர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியிருக்கிறார் என்றும் மாமன்னர் கூறியிருக்கிறார். ”

“அரசாங்கம் முரண்பாடான, குழப்பம் விளைவிக்கும் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் விடுத்திருப்பதன் மூலம் சட்டங்களை மதிக்கத் தவறிவிட்டது. ருக்குன் நெகாரா கோட்பாட்டின்படியும், மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் மாமன்னரின் அதிகாரங்கள், பொறுப்புகளையும் புறக்கணித்திருக்கிறது” எனவும் மாமன்னரின் அறிக்கை அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியது.

மாமன்னர், அரசியலமைப்புச் சட்டம் 40-இன் படி அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியவர். என்றாலும் அரசியலமைப்பு சட்டங்களுக்கு முரணாகவும், மாமன்னரின் அதிகாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டும் சிலர் நடந்து கொண்டாலும் அதையும் சுட்டிக் காட்ட வேண்டிய கடமை மாமன்னருக்கு இருக்கிறது – என அரண்மனையின் இன்றைய அறிக்கை மேலும் தெரிவித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என்றும் மாமன்னர் பொதுமக்களை தனது அறிக்கையின் வழி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் – நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்

மாமன்னரின் அறிக்கை வெளியிடப்பட்டவுடனேயே அந்த அறிக்கையின் சில பகுதிகளை நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் வாசித்தார்.

அரசாங்கம் இதைத் தொடர்ந்து பதவி விலக வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பதவி விலகுவதைத் தவிர மொகிதின் அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் தவறான தகவல்கள் வழங்கியது, நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது, மாமன்னரின் அதிகாரங்களை மீறி நடந்து கொண்டது, சட்டங்களை மதிக்காதது, பொதுமக்களையே ஏமாற்றியது என்பது போன்ற பல்வேறு தவறுகளை மொகிதின் அரசாங்கம் புரிந்திருப்பதால் பதவி விலகுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரபிடா அசிஸ் சாடல்

டான்ஸ்ரீ ரபிடா அசிஸ்

முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் இந்த விவகாரம் குறித்து கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

பின்கதவு வழியாக ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் இன்னொரு முறைகேடு இது என சாடிய அவர், இதற்குப் பொறுப்பானவர்கள் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம், மொகிதின் அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார். இல்லாவிட்டால் மலேசியர்கள் தங்களின் முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பினார்.

அடுத்த வாரம் புதிய அரசாங்கத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

-இரா.முத்தரசன்