கோலாலம்பூர் : நமது நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ம.நவீன். வல்லினம் என்ற இலக்கிய அமைப்பின் மூலம் பலதரப்பட்ட வகைகளிலும் உள்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். உள்நாட்டு படைப்புகள் நூலாக்கப்படும் முயற்சிகள், இலக்கிய அரங்கங்கள், தமிழ் நாட்டு எழுத்தாளர்களை வரவழைத்து இலக்கிய உரைகள் என பல முனைகளில் குறிப்பிடத்தக்க இலக்கியப் பணிகளை தமது வல்லினம் அமைப்பு மூலம் நவீன் ஆற்றி வருகிறார்.
அண்மையில் அவரின் சிறுகதை ஒன்று அனைத்துலக அமைப்பு ஒன்றின் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக அங்கீகாரத்தை மலேசியத் தமிழ் உலகுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
‘வேர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ (எல்லைகள் இல்லா சொற்கள்) என்ற அனைத்துலக அமைப்பு மிகச் சிறந்த அனைத்துலக தற்கால இலக்கியங்களை மொழிபெயர்த்தல், வெளியிடுதல், விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வரும் ஓர் இயக்கமாகும். இத்தகையப் பணிகள் மூலம் அனைத்துலக கலாச்சார பரிமாற்றத்திற்கான கதவுகளைத் திறந்திருக்கிறது இந்த அமைப்பு.
இந்த அமைப்பின் இணையத் தளத்தில்தான் ம.நவீனின் தமிழ் சிறுகதையான “ஒலிப்பேழை” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றம் கண்டிருக்கிறது.
உலக நிகழ்வுகள் குறித்து வேறு மொழிகளில் எழுதப்படும் உலகின் பல்வேறுபட்ட கருத்துகள், அனுபவங்கள், இலக்கியப் பார்வைகளை ஆங்கிலத்தில் கொண்டு வருவதை 2003 முதல் செய்து வருகிறது, ‘வேர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற இந்த அமைப்பு.
மாதம்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை, கவிதைகளை https://www.wordswithoutborders.org/ என்ற தளத்தில் வெளியிடுகிறது.
WWB Daily எனும் வலைப்பூவில் விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், அனைத்துலக இலக்கிய மொழிபெயர்ப்புகளை வெளியிடுகிறது. இலவச பொது நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அனைத்துலக எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் நியூயார்க்கில் வாழ்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறது. மேலும் நூல்களையும் வெளியிடுகிறது.
கல்வியாளர்களுடன் இணைந்து இலக்கியத்தை வகுப்பறைகளுக்குக் கொண்டு செல்லவும், வெளிநாட்டு எழுத்தாளர்களுடன் நிகழ்வுகளை நடத்தவும், உலகளாவிய எழுத்தின் விரிவான காப்பகத்தை பராமரிக்கவும் இந்தத் தளம் செயல்பட்டு வருகிறது.
உலக இலக்கிய உரையாடலுக்கான தளமாக அனைத்துலக எழுத்தாளர்கள் முதல் பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் தளமாகத் திகழும் ‘வேர்ட்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ பல அனைத்துலக அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரையில் 140 நாடுகளின் 126 மொழிகளைச் சேர்ந்த 2,700க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளை இவ்விதழ் வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ம.நவீனின் சிறுகதையைக் கீழ்க்காணும் இணையத் தளத்தில் படிக்கலாம்:
https://www.wordswithoutborders.org
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal