Home இந்தியா ராகுல் காந்தி – பிரியங்கா மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்

ராகுல் காந்தி – பிரியங்கா மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தனர்

637
0
SHARE
Ad
குடும்பத்தினரைச் சந்திக்கும் ராகுல் காந்தி – பின்னால் சிவப்பு ஆடையில் அமர்ந்திருப்பவர் பிரியங்கா காந்தி

லக்னோ : லகிம்பூர் கேரி என்ற இடத்தில் சாதாரண விவகாரமாகத் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் தற்போது ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி பங்கேற்போடு விசுவரூபமெடுத்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சி தோற்கடிக்கப்படலாம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை இழக்கலாம் என்னும் அளவுக்கு தேசியப் பிரச்சனையாகி நிலைமை மோசமாகியுள்ளது.

சீத்தாபூர் என்ற இடத்திலுள்ள விருந்தினர் ஓய்வு விடுதியில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி, நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். ராகுல் காந்தி சகோதரி பிரியங்காவைச் சந்திக்க லக்னோ விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து சீதாப்பூர் சென்றார்.

விவசாயிகள் போராட்டத்தின்போது சிலர் மீது அமைச்சர் ஒருவரின் கார் மோதி 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க பிரியங்கா காந்தி முற்பட்ட போது அவர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவர் தங்கியிருந்த சீத்தாபூர் ஓய்வு விடுதியிலேயே வீட்டுக் காவலில் வைப்பட்டார்.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு 5 பேர் மட்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க காவல் துறையினர் அனுமதி அளித்தனர்.

விமான நிலையத்தில் ராகுல் காந்தி – காவல் துறையினர் தகராறு

லக்னோ விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்திக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நேற்று தகராறும் மூண்டது.

தனது சகோதரியைக் காண லக்னோ விமான நிலையத்திலிருந்து ராகுல் கிளம்பியபோது, அவர் செல்ல வேண்டிய பயணப் பாதையை காவல் துறையினர் நிர்ணயிக்க முற்பட்டனர்.

“நான் எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை நானே தீர்மானித்துக் கொள்கிறேன். நீங்கள் யார் அதில் தலையிடுவதற்கு?” எனக் கேள்வி கேட்டு தகராறு செய்த ராகுல் தனது சொந்த பயணத் திட்டத்தின்படி காரில் புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் ராகுல் காந்தியும், பிரியங்காவும் போராட்டத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.