இலண்டன் : தற்போது இலண்டனில் தமது துணைவியாருடன் ஓய்வெடுத்து வரும் மாமன்னர் அங்கு மலேசிய இந்தியர் ஒருவர் நடத்தி வரும் இந்திய உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் இலண்டனிலுள்ள கோபால்ஸ் கோர்னர் என்ற பெயரில் மலேசிய இந்தியர் ஒருவர் நடத்தும் உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்திய சுவாரசியமான செய்தியை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலண்டனில் கோபால்’ஸ் கோனர் (Gopal’s Corner) என்ற பெயரில் மலேசிய இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் இந்த உணவகம் இலண்டனில் மார்க்கெட் ஹால் விக்டோரியா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்ட மாமன்னர் அங்கு மதிய உணவு அருந்தி மகிழ்ந்ததாக வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 22) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த உணவகத்தில் ரொட்டிச் சானாய் எனப்படும் பரோட்டா உணவும், மீன் தலை கறியும் மிகவும் பிரபலம் எனவும் பதிவிட்ட மாமன்னர் அந்த உணவகம் முன் தான் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்ட மாமன்னர் தம்பதியர் அப்போது முதல் அங்கு தங்கி ஓய்வெடுத்து வருவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
16-வது மாமன்னராகப் பதவியேற்ற பின்னர் மாமன்னர் தம்பதியர் பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் 2019 டிசம்பரில் மாமன்னர் பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருந்தார்.
மாமன்னர் தம்பதியர் அடுத்த வாரம் மலேசியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.