சிட்னி : ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் நோவாக் ஜோகோவிச், நீதிமன்ற மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர் ஏறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறுவதில் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும் ஜோகோவிச் தெரிவித்திருந்தார்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்திற்காக ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கு அந்நாடு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் அரசாங்க முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்த ஜோகோவிச் அந்த வழக்கில் வெற்றி பெற்றார். ஜனவரி 10-ஆம் தேதி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த வேளையில் ஜோகோவிச்சுக்கு எதிராக இரண்டாவது முறையாக அவரின் குடிநுழைவை (விசா) ஆஸ்திரேலியா இரத்து செய்தது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காரணத்திற்காகவும், நாட்டுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவர் என்ற காரணத்திற்காகவும் அவரின் குடிநுழைவை ஆஸ்திரேலியா இரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுகிழமை கூட்டரசு நீதிமன்றம் (பெடரல் நீதிமன்றம்) ஜோகோவிச்சின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
நாளை திங்கட்கிழமை ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடங்குகின்றன.