தைப்பே :ஏற்கனவே மோசமடைந்திருக்கும் அமெரிக்க-சீன உறவுகளில் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தைவானுக்கு வருகை மேற்கொண்ட நான்சி பெலோசி, அங்கிருந்து புறப்பட்டார்.
“நெருப்புடன் விளையாடாதீர்கள்” என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ மன்றத்தின் அவைத் தலைவர் நான்சி பெலோசி நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) தைவான் வந்து சேர்ந்தார்.
பெலோசியையும் அவரின் குழுவினரையும் ஏற்றிக் கொண்டு வந்த சிறப்பு விமானம் தைவான் தலைநகர் தைப்பேயில் தரையிறங்கியது.
அவரின் விமானம் தரையிறங்குவதை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பேர் சமூக ஊடகங்களின் வழி அதிக எதிர்பார்ப்புடன் பார்த்தனர். இதன் காரணமாக, சீனாவின் வெய்போ என்ற சமூக ஊடக இணையத் தளம் முடங்கியது. டுவிட்டர் தள்ளத்திற்கு நிகரான சீனாவின் தளம் இதுவாகும்.
தைவானிய அதிபர் ட்சாய் இங் வென்-னை நான்சி சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
நான்சி பெலோசியின் நடவடிக்கையைத் தொடர்ந்து சீன இராணுவ விமானங்கள் தைவானின் வான் வெளியில் அத்துமீறிப் பறந்தன.
சீனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.