Home நாடு விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்துச் செய்தி

விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்துச் செய்தி

440
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய
பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலருக்கு உயிராய் விளங்கும்
இயற்கை அன்னைக்கு மலர் சூடி,
உயிருக்கு வேராய் விளங்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
நன்றி கூறி,
தைப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும்
அனைவருக்கும் வாழ்த்துகள்!

இந்நாட்டில் வாழும் நமது தமிழர்களைத் தவிர்த்து, உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழரின் பண்பாடுகளில் ஒன்றாக விளங்கும் தைப் பொங்கல் திருநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

தைத் திங்களாம் முதல் நாள் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. மனித குல வாழ்விற்கு முக்கிய அங்கமாகத் திகழும் – பஞ்சபூதமாக விளங்கும் இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் அதேவேளையில், உலகத்தார் அனைவருக்கும் வேராக விளங்கும் விவசாயப் பெருமக்களுக்கும், அவர்களுக்குத் துணையாக இருந்துவரும் உயிரினங்களும், நன்றி கூறும் விதமாகவும் இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, இந்நாளில் இனிய பொங்கலை உண்டு – களித்துவிட்டு, தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் மக்கள் ஈடுபடும் நேரமாகவும் இருந்து வருகின்றது. தமிழர்களிடையே மரபு சார்ந்த விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன. அவற்றினை எல்லாம் என்றும் மறவாமல் இருப்பதோடு, அடுத்துவரும் சந்தததியினருக்கும் எடுத்துக் கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இருந்தாலும் இன்றைய நவீன உலகில் அவற்றினைக் கற்றுக் கொள்வதற்கும் – அறிந்து கொள்வதற்கும் நாம் அதிகமான நேரத்தை ஒதுக்குவதில்லை. காரணம், இன்றைய உலகமே ஊடகங்களில் மூழ்கியுள்ளது. நமக்கெல்லாம் ஊடகங்கள் முக்கியம் என்றாலும், அவ்வப்போது நமது பாரம்பரியப் பண்பாடுகளை கெட்டியாகப் பிடித்து – கட்டிக் காக்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, நமது மொழியையும், மொழியால் வாழுகின்ற தமிழர்களின் அறிவியலையும் அறிந்து கொள்ள முடியும் என்பதனை இந்த வேளையில் உங்களுக்கெல்லாம் அன்புடன் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

அந்த வகையில் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் இந்தப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும், உடன் பிறப்புகளாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.