சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காலமான ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தைதான் இளங்கோவன். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தத் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்திருக்கின்றன. யாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என தமிழக அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் இந்தத் தொகுதியில் பாஜகவே போட்டியிடலாம் என்றும் அந்தக் கட்சியின் தமிழ் நாடு தலைவர் அண்ணாமலையே அங்கு போட்டியிடலாம் எனவும் ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.