Home இந்தியா நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

356
0
SHARE
Ad

புதுடில்லி : மணிப்பூர் கலவரங்கள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், நரேந்திர மோடியின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன.

எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்துள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றம் அமளி துமளியுடன் செயல்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவைக்கு உள்ளே விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி இருக்கின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான பரிந்துரையை சமர்ப்பித்தனர்.

50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானப் பரிந்துரையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதங்களுக்கான நாள், நேரத்தை அறிவிப்பதாக ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 545 இடங்களில் பெரும்பான்மையாக 301 இடங்களை பாஜக வைத்திருக்கிறது.

இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பில்லை. எனினும் இன்னும் ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.