Home Photo News சுங்கை துவா சட்டமன்றம் : மீண்டும் அமிருடின் ஷாரியா? சிலாங்கூருக்கு புதிய  மந்திரி பெசாரா?

சுங்கை துவா சட்டமன்றம் : மீண்டும் அமிருடின் ஷாரியா? சிலாங்கூருக்கு புதிய  மந்திரி பெசாரா?

393
0
SHARE
Ad

(6 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் சில அனல் பறக்கும் தொகுதிகளாக மாறியுள்ளன. அவற்றில் ஒன்று சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை துவா சட்டமன்றம். சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி போட்டியிடும் அந்தத் தொகுதியின் நிலவரம் குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

* அதிருப்தி அலைகளில் 24% இந்திய வாக்காளர்கள் – எந்தப் பக்கம்?

* அடுத்த மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்குமா கோம்பாக் வட்டார சட்டமன்றத் தொகுதிகள்?

#TamilSchoolmychoice

* மசீச போட்டியிடாததால் சீன வாக்குகள் பிளவுபடுமா?

கடந்த சனிக்கிழமை ஜூலை 29ஆம் தேதி காலை 8.00 மணிக்கு வேட்புமனுதாக்கல் தொடங்கியபோது – ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தத் தொகுதிக்குச் செல்வார்? – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் யாருக்கு ஆதரவாக எந்தத் தொகுதிக்குச் செல்வார்? என ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அவர்கள் இருவருமே அன்று காலை முதன் முதலில் சென்ற இடம் கோம்பாக் வேட்புமனுதாக்கல் மையத்திற்குத்தான். அதிலிருந்தே கோம்பாக் வட்டார சட்டமன்றத் தொகுதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் சுங்கை துவா, உலு கிளாங், கோம்பாக் செத்தியா. அந்த மூன்று தொகுதிகளின்  வேட்புமனுத் தாக்கல்களும் ஒரே இடத்தில் நடைபெற்றன. அங்குதான் நாட்டின் முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் 10 நிமிட இடைவெளியில் சென்றனர். எனவே,  சிலாங்கூர் மாநிலத்தில் மட்டுமன்றி நாடு தழுவிய அளவிலும் அனைவரின் பார்வையும் கோம்பாக் நோக்கித் திரும்பி இருப்பதை காண முடிகிறது.

இந்நாள் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி போட்டியிடுவது சுங்கை துவா சட்டமன்றத்தில். முன்னாள் மந்திரி பெசார் அஸ்மின் அலி போட்டியிடுவது சுங்கை துவாவுக்கு அடுத்திருக்கும் உலு கிளாங் சட்டமன்றத்தில். அதனால்தான் ஆறு மாநில சட்டமன்றத்  தேர்தல்களில் கோம்பாக் வட்டாரம் மட்டும் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

ஆகஸ்டு 12 தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் அரசியல் சிக்கல்களின் மையப் புள்ளியும் கோம்பாக் வட்டார சட்டமன்றத் தொகுதிகள்தான்.  பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் சிலாங்கூரில் ஆட்சி அமைத்தால் அமிருடின் ஷாரிதான் மந்திரி  பெசாராகத்  தொடர்வார் என அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார்.

சிலாங்கூர் மாநிலத்தின் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அந்த வெற்றியோடு அமிருடின் ஷாரியும் சுங்கை துவாவில் வெற்றி பெற்றால்தான் அவர் மீண்டும் மந்திரி பெசாராக முடியும்.

சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹாரப்பான் மீண்டும் கைப்பற்றி – சுங்கை துவா தொகுதியில் அமிருடின் ஷாரி தோல்வியுற்றால் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இன்னொரு  புதிய மந்திரி பெசார் நியமிக்கப்படுவார்.

அதனால்தான் சுங்கை துவா சட்டமன்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

அமிருடின் ஷாரியின் அரசியல் குரு அஸ்மின் அலி

அரசியலில் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கொருவர் எதிராக வெவ்வேறு கட்சிகளில் இயங்குவது சகஜம். எனவே அரசியலில் குரு – சிஷ்யனாக இருந்தவர்கள் கால ஓட்டத்தில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்க்க முடியாதது.

அஸ்மின் அலி மந்திரி பெசாராக இருந்த போதும் – பிகேஆர் கட்சியில் துணைத் தலைவராக இருந்தபோதும், அவரின் சீடராகச் செயல்பட்டவர் அமிருடின் ஷாரி. ஆனால் ஷெராட்டன் நகர்வின்போது தன் குருவைப் பின்பற்றி பிகேஆர் கட்சியில் இருந்து அவர் வெளியேறவில்லை. 15-வது பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் தன் அரசியல் குரு அஸ்மின் அலிக்கு எதிராக நிறுத்தப்பட்டார் அமிருடின் ஷாரி. குருவைத் தோற்கடித்து வெற்றியும் பெற்றார்.

அமிருடின் ஷாரியின் அந்த முன்னாள் அரசியல் குரு அஸ்மின் அலி இந்த முறை போட்டியிடுவது சுங்கை துவாவை அடுத்துள்ள உலு கிளாங் தொகுதியில்! எதிர்பாராத விதமாக ஆகஸ்டு 12 தேர்தல் முடிவுகள் பெரிகாத்தான் நேஷனலுக்கு வெற்றியைத் தேடித் தந்து அக்கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டால் அஸ்மின் அலிதான் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசார் கோம்பாக் வட்டார சட்டமன்றத் தொகுதியில் இருந்துதான் வருவார் என்பது பரவலான கணிப்பு.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. ஒருவர் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் மீண்டும் செனட்டராக நியமிக்கப்பட்டு அமைச்சராகவோ துணை அமைச்சராகவோ நியமிக்கப்படலாம். ஆனால் அஸ்மின் அலியோ அமிருடின் ஷாரியோ தாங்கள் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி கண்டால் வேறு எந்த வகையிலும் மந்திரி பெசாராகவோ ஆட்சிக் குழு உறுப்பினராகவோ மாநில அரசாங்க அமைப்பில் அவர்கள் உள்ளே நுழைய முடியாது.

இந்தப் பின்புலங்களோடு இனி சுங்கை துவா தொகுதிக்கு வருவோம்:

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி

அமிருடின் ஷாரி 2008 முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியை வெற்றிகரமாக தற்காத்து வந்திருக்கிறார். 2008 – 2013  பொதுத்தேர்தல்களில் பத்துகேவ்ஸ் என இந்தத் தொகுதி அழைக்கப்பட்டது. 2018இல் சுங்கை துவா என பெயர் மாற்றம் கண்டது. கடந்த பொதுத்தேர்தலில் 11,374 பெரும்பான்மை வாக்குகளில் இந்தத் தொகுதியில் அமிருடின் ஷாரி வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மஇகாவின் டத்தோ ரவிச்சந்திரன் மற்றும் பாஸ் வேட்பாளரைத் அவர் தோற்கடித்தார். 2013 பொதுத்தேர்தலிலும் மஇகாவின் ரவிச்சந்திரனை அமிருடின் ஷாரி தோற்கடித்தார்.

இந்த முறை  பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் அமிருடின் ஷாரியை எதிர்த்து முகமட் ஹானிஃப் ஜமாலுடின், பாஸ் – பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளராக சுமன் கோபால் போட்டியிடுகிறார். இவரைப் பற்றிய தகவல்கள் அதிகம் தெரியவில்லை. இவர் உள்ளூர்க்காரரா – இந்திய வாக்குகளை பிளவுபடுத்தும் ஆற்றல் உள்ளவரா – என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

தேசிய முன்னணியும் அமிருடின் ஷாரியை ஆதரிப்பதால், கணக்குப்படி அமிருடின் ஷாரி இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். காரணம் மஇகா – தேசிய முன்னணி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட டத்தோ ரவிச்சந்திரன் 6,072 வாக்குகளைப் பெற்றார். அந்த வாக்குகளையும் சேர்த்தால் அமிருடினுக்கு முன்பைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்க வேண்டும்.

ஆனால் புதிய சூழ்நிலைகளில் நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த முறை மலாய் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் – அம்னோ ஆதரவு வாக்குகள் அப்படியே பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வேட்பாளரான அமிருடின் ஷாரிக்கு செல்லுமா- என்பது இப்போதைக்கு கணிக்க முடியாத ஒன்று.

2018 புள்ளிவிவரங்களின்படி, சுங்கை துவா தொகுதியில் 61 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்கள். சீன வாக்காளர்கள் 13  விழுக்காடு. இந்திய வாக்காளர்கள் 24 விழுக்காட்டினர். 2  விழுக்காட்டினர் மற்றவர்கள். எனவே மலாய் வாக்காளர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் திசை திரும்பும்  என்பதைப்  பொறுத்தே அமிருடின் ஷாரியின் வெற்றியும் நிர்ணயிக்கப்படும். இந்த முறை 18 வயது இளம் வாக்காளர்களும் இணைகின்றனர். ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தலில் 49,055 வாக்காளர்கள் சுங்கை துவா சட்டமன்றத்தில் வாக்களிக்கத் தகுதி கொண்டிருக்கின்றனர்.

இந்திய வாக்குகள் அமிருடின் ஷாரிக்கு கிடைக்குமா?

இந்திய வாக்காளர்கள் என்று வரும்போது அவர்களிடையே பரவலான அதிருப்திகள் நிலவுகின்றன. இரண்டு முறை சுங்கை துவா தொகுதியில் போட்டியிட்ட மஇகா –  இந்த  முறை ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கிக்   கொண்டது மஇகா ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

மஇகா போட்டியிட முன்வராத நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் என்ற முறையில் அன்வார் இப்ராகிம் மஇகா தலைமைத்துவத்தை வற்புறுத்தி தேர்தல் களத்திற்கு திரும்ப அழைத்து வந்திருக்கலாம் என்ற குறைகூறல்களும் நாடு தழுவிய நிலையில் நிலவுகின்றன. அன்வார் பிரதமரானது முதல் – கடந்த 7 மாதங்களில் இந்திய சமுதாயத்திற்கென குறிப்பிட்ட திட்டங்கள் எதையும் அறிவிக்காததும் இந்தியர்களிடையே தீராத மனக் குறையாக இருந்து வருகிறது.

இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசிய பக்காத்தான் கூட்டணியின் (அமானா கட்சி) மேரு சட்டமன்ற உறுப்பினருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் இந்தியர்களிடையே பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இப்படிப் பலவகைகளில் அதிருப்தி கொண்டிருக்கும் இந்திய வாக்காளர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும் விதத்தில், எப்போதும் இந்தியர்களுக்காக உரிமைக் குரல் கொடுக்கும் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததும் பக்காத்தான் ஹாரப்பான் மீது வெறுப்புணர்வைத் தோற்றுவித்திருக்கின்றன.

எனவே, மஇகாவினர் – இந்திய வாக்காளர்கள் – சுங்கை துவா தொகுதியில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் தங்களின் அதிருப்தியை – எதிர்ப்பைத் தெரிவிக்க – அமிருடின் ஷாரிக்கு எதிராக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. அமிருடின் மந்திரி பெசார் வேட்பாளர் என்பது மட்டுமே இந்திய வாக்காளர்களைப் பொறுத்த மட்டில் அவருக்கிருக்கும் சாதகம்.

இத்தகைய காரணங்களால் சுமார் 24 விழுக்காட்டு இந்திய வாக்குகளும் சுங்கை துவா தொகுதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மசீசவும் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாததால், அந்தக் கட்சிக்கு ஆதரவான சீன வாக்குகளும் எந்தப் பக்கம் செல்லும் என்பதும் கேள்விக்குறி.

– இரா.முத்தரசன்