பெய்ஜிங் – சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.
மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா ஆட்சேபனை கடிதம் அனுப்பும் என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான எந்தவொரு சர்ச்சையிலும் மலேசியாவின் வழக்கமான நடைமுறை இது என்றும் அவர் கூறினார்.
சீனாவின் வரைபடம் குறித்து இந்தியாவும் பிலிப்பைன்சும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
இந்த வரைபடம் தொடர்பில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் அதிகார வரம்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான சமீபத்திய முயற்சியாகும் என்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சர்ச்சைக்குரிய அக்சாய்-சின் பீடபூமியை சீனப் பிரதேசத்தில் சேர்ப்பது குறித்து இந்தியாவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.