தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2023
தேசிய இயற்கைக் கழகம் – (Malaysian Nature Society)- MNS-வும் ஸ்தெல்லா இராஜேந்திரன் சுற்றுச் சூழல் கல்வி அறக்கட்டளையும் (SREEF) இணைந்து உலக தூய்மை தினத்தை முன்னிட்டு வருகின்ற 15 செப்டம்பர் 2023 முதல் 13 அக்டோபர் 2023 வரை தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டியினை நடத்தவுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே தலைமைத்துவம், பள்ளி வளாகத்தில் முறையான மறுசுழற்சிப்பொருள் நிர்வகிப்பு, உலக தூய்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இப்போட்டியின் முதன்மை நோக்கங்களாகும். மேலும், மாணவர்களிடையே மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதையும் இத்திட்டம் இன்றியமையாத நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாறான இயற்கை சார்ந்த கருப்பொருளை மையமாக கொண்ட போட்டிகள் கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் இவ்வாண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தாங்கள் பயிலும் பள்ளி மூலமாக பதிவுசெய்து பங்கேற்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள் இப்போட்டியின் அதிகாரப்பூர்வ தொலைவரியில் இணைந்து கொள்வதன்வழி போட்டியின் விதிமுறைகளையும் கூடுதல் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். மறுசுழற்சிப்பொருளைக் கொண்டு இயற்கை மாசுபாடின்றியும் அழகு, வணிக நுணுக்கங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்படும்.
புத்தாக்கப்பொருள்களுக்கு 5 நிலைகளில் பரிசுத்தொகைகள் வழங்கப்படும். கூடுதலாக, வெற்றிப்பெறும் குழுக்களுக்கும் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிச் சான்றிதழும் நற்சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றிபெறும் படைப்புகள் இயற்கைப் பற்றாளர்க் கழகத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுச் சூழல் கல்வி பரப்புரைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இதனிடையே, உலக தூய்மை தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இப்போட்டியில் தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொண்டு தங்களது ஆற்றல்மிகு மாணவர்களின் புத்தாக்க படைப்பாற்றலைத் தேசிய பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென தேசிய இயற்கைக் கழகத்தின் துணைத் தலைவர் திரு. ஐயாதுரை இலெட்சுமணன் (படம்) கேட்டுக்கொண்டார். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென சிறப்பாக ஏற்படுத்தி தரப்பட்டுள்ள இவ்வாய்ப்பை அவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு இன்னும் அதிகமான இயற்கை சார்ந்த முனைப்புகள் முன்னெடுக்கப்பட மாணவர்களின் பங்கேற்பு உந்துசக்தியாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேல் விபரங்களுக்குப் போட்டி ஏற்பாட்டுக் குழு துணை நிர்வாகி ஆசிரியர் திரு.பத்மநாதன் இராஜரத்தினம் 019-2508161 / செயலாளர் திருமதி விஜயலட்சுமி 017-2327060 ஆகியோரை என்ற எண்களில் தொடர்புக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.