புத்ரா ஜெயா : அண்மையில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திடீரென நடிகர் ரஜினிகாந்தை புத்ரா ஜெயாவிலுள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து அளவளாவியது மலேசிய இந்தியர்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது படப்பிடிப்புக்கோ மலேசியாவுக்கு வரும் நடிகர்கள் மலேசிய பிரதமரையோ நம் நாட்டு அமைச்சர்களையோ சந்திப்பது வழக்கம்.
நடிகர் ஷாருக்கானும் அவ்வாறு ஒரு முறை செய்திருக்கிறார். படப்பிடிப்புக்கோ, மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகவோ வந்தவர் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்தார்.
ஆனால் ரஜினிகாந்த் மலேசியாவுக்கு வந்ததும் தெரியவில்லை – போனதும் தெரியவில்லை. அவருக்கென மலேசியாவில் நிகழ்ச்சியோ, படப் பிடிப்போ எதுவும் இல்லை.
ரஜினிகாந்த் சார்பில் இதுவரை எந்த ஒரு முன்னறிவிப்பும் அல்லது பிரதமரைச் சந்தித்த சம்பவம் குறித்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ரஜினிக்கென டுவிட்டர் பக்கமும் உண்டு. ஒரு நாட்டின் பிரதமரைச் சந்தித்தது குறித்து ரஜினியின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்திகூட இல்லை. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும் அவ்வளவாக இந்த செய்தி வெளியிடப்படவில்லை.
பொதுவாக, கண்கொத்திப் பாம்பாக செயல்படும் தமிழகப் பத்திரிகையாளர்கள் ரஜினியைப் போன்ற பிரமுகர்கள் வெளிநாடு செல்லும்போது விமான நிலையத்தில் மோப்பம் பிடித்து புகைப்படமோ காணொலியோ எடுத்து விடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படியும் ரஜினி அவர்களிடம் சிக்கவில்லை.
ரஜனி தனி சிறப்பு விமானத்தில் பறந்து வந்து அன்வாரைப் பார்த்து விட்டு அன்றிரவே சென்னை திரும்பினார் என்ற தகவலும் உண்டு. ஆனால் அவர் மாஸ் விமானத்தில்தால் சென்னையில் இருந்து கோலாலம்பூர் வந்தார் என்றொரு தகவலும் உலவுகிறது.
ஆனால் அன்வார் இப்ராகிம் ரஜினியுடனான சந்திப்பை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் தொடர்பான காணொலிகளையும் புகைப்படங்களையும் பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.
அதைப் பார்த்த அனைவருக்கும் தோன்றும் எண்ணம் ரஜினியின் எளிமை தான்! ரஜினியின் எளிமை ஏற்கனவே எல்லோரும் பாராட்டும் ஒன்றுதான் என்றாலும் ஒரு நாட்டின் பிரதமரை அவரின் அலுவலகத்தில் சந்திக்கும் தருணத்தில் கூட அது குறித்த எந்த ஆர்ப்பாட்டமும் காட்டாமல் எளிமையாக வேட்டி – டி சட்டையுடன் அவர் சென்றது அவர் மீதான மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது.
அதே வேளையில் கடந்த சில மாதங்களாக இந்திய சமூகத்தில் அன்வாருக்கான ஆதரவும் மதிப்பும் வெகுவாக குறைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்,
இந்நிலையில் இந்தியர்களிடையே பிரபலமான ரஜினிகாந்தை சந்திப்பதன் மூலம் தனது தோற்றத்தையும் இந்தியர்கள் மீது தான் கொண்டிருக்கும் அபிமானத்தையும் வெளிப்படுத்த அன்வார் இப்ராகிம் முனைந்திருக்கிறார் என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ படப்பிடிப்பிற்கோ மலேசியாவுக்கு வராத நிலையில் ரஜினிகாந்த் பிரதமரை சந்திப்பதற்காக மட்டுமே கோலாலம்பூர் வந்ததாக தெரிகிறது. எனவே இது பலருக்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எப்போது சென்னை திரும்பினார் என்ற தகவலும் எங்கேயும் வெளியிடப்படவில்லை.
அன்வாரின் காணொலிகள் வெளியிடப்பட்டதும் இப்போதும் தமிழ் நாட்டிலும் பரபரப்பு பற்றிக் கொண்டு விட்டது. ஏன் ரஜினி ரகசியமாக கோலாலம்பூர் சென்று அன்வாரைச் சந்தித்தார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.
அன்வாரின் சிறப்பு அழைப்பின் காரணத்தால்தான் ரஜினி கோலாலம்பூர் வந்து அவரைச் சந்தித்தார் என நம்பப்படுகிறது.
மலேசியப் பிரதமர் ஒருவரை ரஜினி சந்திப்பதும் இது முதன் முறையல்ல! சில ஆண்டுகளுக்கு முன்னர் நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது சென்னைக்கு அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டார். அப்போது ரஜினியின் இல்லம் சென்று அவரைச் சந்தித்தது ஊடகங்களில் பெரிய அளவில் பிரபலமானது. அப்போதும் இந்திய வாக்குகளைக் கவர்வதற்காகத்தான் நஜிப், ரஜினியைச் சந்தித்தார் என்றும் கூறப்பட்டது.