கோத்தா கினபாலு : சபா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதைத் தீர்ப்பதற்காகவே சாஹிட் ஹாமிடி சபாவுக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 8) வருகை தந்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் சபாவில் அரசியல் நெருக்கடி எதுவும் இல்லை என்றும் மாறாக தான் வந்தது இங்கு சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகவும்தான் என சாஹிட் கூறினார்.
சபா சட்டமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என ஆரூடங்கள் எழுந்திருக்கும் நிலையில், சாஹிட் சபா அம்னோ தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
2025, செப்டம்பர் மாதத்தோடு சபா சட்டமன்றத்திற்கான தவணைக்காலம் முடிவடைகிறது.
எனினும் அதற்கு முன்பாக, இந்த ஆண்டிலேயே முதலமைச்சர் ஹாஜிஜி நூர் சட்டமன்றத்தைக் கலைப்பார் – சட்டமன்றத் தேர்தலை நடத்துவார் – என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
சபா அம்னோ, ஒற்றுமை அரசாங்கத்தின் மடானி கொள்கையோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கும் எந்தத் தரப்புடனும் ஒத்துழைக்கத் தயார் எனவும் சாஹிட் கூறினார். தற்போது சபா அம்னோ, ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணியுடன் இணைந்து மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஜிஆர்எஸ் கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் ஹாஜிஜி நூர் செயல்படுகிறார்.
சபா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால், ஒற்றுமை அரசாங்கத்தின் அடிப்படையில் அம்னோவும், பக்காத்தானும் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.