Home நாடு கோலகுபு பாருவில் பக்காத்தான் வெற்றி பெற்றால் வழக்கு போடுவோம் – தக்கியூடின் ஹாசான் கூறுகிறார்

கோலகுபு பாருவில் பக்காத்தான் வெற்றி பெற்றால் வழக்கு போடுவோம் – தக்கியூடின் ஹாசான் கூறுகிறார்

698
0
SHARE
Ad
தக்கியூடின் ஹாசான்

கோலகுபுபாரு : சனிக்கிழமை (மே 11) நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியூடின் ஹாசான் தெரிவித்தார்.

காரணம், பக்காத்தான் பல தேர்தல் முறைகேடுகளையும், குற்றங்களையும் இழைத்துள்ளது என அவர் கூறினார். அதிகார விதிமீறல்களை பக்காத்தான் செய்துள்ளது என்றும் அரசாங்க சாதனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது என்றும் தக்கியூடின் மேலும் கூறினார். நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை காணொலிகள் வாயிலாகத் தாங்கள் கொண்டிருப்பதாகவும், சில வாக்குமூலங்களைத் தாங்கள் பதிவு செய்திருப்பதாகவும் கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினருமான தக்கியூடின் தெரிவித்தார்.

கோலகுபுபாரு தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜசெகவின் பாங் சோக் தாவ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பிலும் கைருல் அசாரி சாவுட் பெரிக்காத்தான் கூட்டணி சார்பிலும் களம் காண்கின்றனர். கைருல் பெர்சாத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவராவார்.

#TamilSchoolmychoice

பார்ட்டி ராயாட் மலேசியா சார்பில் ஹாஃபிசா சைனுடின் போட்டியிடுகிறார். நியாவ் கே சின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவ் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் ஆவார். 31 வயதான பாங் சோக் தாவ் அம்பாங் வட்டாரத்தைச் சேர்ந்தவர். யூனிடென் என்னும் தெனாகா நேஷனல் பல்கலைக் கழகத்தின் மின்சாரம், மின்னியல் துறை பட்டதாரியான பாங் 2018-2020 காலகட்டத்தில் தொழில்நுட்பம்,  சுற்றுச்சூழல் அமைச்சரின் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2020-2022 காலகட்டத்தில் ஜசெக பிரச்சார ஊடகமான ஊபா டிவி என்னும் ஊடகத்தின் உதவித் தயாரிப்பாளராக செயல்பட்டார்.