Home உலகம் டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி!

டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி!

376
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ப்ளோரிடா மாநிலத்தில் டொனால்ட் டிரம்ப் மீது ஒரு கொலை முயற்சி நடந்ததாக எஃப்.பி.ஐ. என்னும் அமெரிக்க மத்திய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப்  பாதுகாப்பாக இருப்பதாகவும், காயமடையவில்லை எனவும் அவரின் பிரச்சாரக் குழுவினரும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் கோல்ஃப் மைதானத்தின் எல்லைக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியிருந்ததால், அவர் மீது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  தொலைநோக்கி கொண்ட ஒரு “ஏகே-47” வகை துப்பாக்கி மற்றும் ஒரு கோ-புரோ (GoPro) காணொலி (வீடியோ) கேமரா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமெரிக்க ரகசிய சேவை உறுதிப்படுத்தியது.

சந்தேக நபர் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றார். எனினும், பொதுமக்கள் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து அந்தக் காரைக் கண்டுபிடித்து ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளோம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் துப்பாக்கி ஏந்தியவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

டிரம்பின் அருகாமையில் துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர் அவர் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கடந்த இரண்டு மாதங்களில் டிரம்ப் இரண்டாவது முறையாக ஒரு துப்பாக்கி ஏந்தியவரின் இலக்காக இருந்ததைக் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

கடந்த ஜூலை 13-ஆம் தேதி, பென்சில்வேனியாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது முன்னாள் அதிபரான டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, அதனால் அவர் காதில் காயமடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அதிகாரிகள், டிரம்ப் இருந்த திசை நோக்கி துப்பாக்கி ஏந்தியவர் உண்மையில் சுட்டாரா என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ரகசிய சேவை பாதுகாவலர்கள் சந்தேக நபருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

டிரம்ப் கோல்ஃப் விளையாடியபோது மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரகசிய சேவை அதிகாரிகள் வேலியிலிருந்து துப்பாக்கிக் குழாய் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, உடனடியாக அந்த நபருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அந்த நபர் அந்த இடத்திலிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் துப்பாக்கியுடனும் தொலைநோக்கியுடனும் அமர்ந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை விரைவாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும், டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதியடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.