Home நாடு மக்கோத்தா இடைத் தேர்தல் : விக்னேஸ்வரன்-சாஹிட் தலைமையில் இந்தியர்களுடனான பிரச்சாரக் கூட்டம்!

மக்கோத்தா இடைத் தேர்தல் : விக்னேஸ்வரன்-சாஹிட் தலைமையில் இந்தியர்களுடனான பிரச்சாரக் கூட்டம்!

55
0
SHARE
Ad

குளுவாங்: இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மஇகா-வினரை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சந்திக்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கை, செப்டம்பர் 22-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணி அளவில் குளுவாங் நகரில் நடைபெற இருக்கிறது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். குளுவாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி(N-29) வாக்காளர்கள், தங்களின் குரலை ஜோகூர் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வதற்காக, செப்டம்பர் 28-ஆம் நாள் தங்களுக்கான புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க இருக்கும் நிலையில் மிகவும் பிரமாண்டமாக இந்தப் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஇகா தேசியத் தலைவரின் தனிச் செயலரும் மத்திய செயலவை உறுப்பினருமான எல்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேசியப் பொதுப் பேரவையில் சாஹிட் ஹாமிடி உரையாற்றியபோது…

அத்தொகுதி முழுவதும் மஇகா-வினர் பிரச்சார நடவடிக்கையை கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவர்களை மேலும் முடுக்கிவிடும் வகையில், மக்கோத்தா தொகுதியைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் அணிதிரளும் இந்த நிகழ்ச்சி மஇகா தேசியத் தலைவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுவசுப்பிரமணியன் மேலும் சொன்னார்.

#TamilSchoolmychoice

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன், மற்றும் உயர்மட்டத் தலைவர்கள், ஜோகூர் மாநில மஇகா தலைவர்கள், குளுவாங் தொகுதித் தலைவர்கள், மற்ற பொறுப்பாளர்கள் என பல்லாயிரக் கணக்கில் இந்தியர்கள், குறிப்பாக மக்கோத்தா வாக்காளப் பெருமக்கள் எழுச்சியுடன் அணிவகுக்க இருக்கும் இந்த நிகழ்ச்சி, அம்னோ வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லா மிக அதிகப் பெரும்பான்மையில் வெற்றிபெற துணை புரியும் என்று சிவசுப்பிரமணியன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

எல்.சிவசுப்பிரமணியம்

இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி, குறிப்பாக, அம்னோ அடைய இருக்கும் அபார வெற்றி, மக்கோத்தா தொகுதியில் வாழ்கின்ற இந்திய சமுதாய மக்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காண வழிகாணும். அதற்கு அடித்தளமாக அமையக்கூடிய இந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, குளுவாங் வரலாற்றில் என்றும் நிலைபெறும் வரலாறாக அமையும்.

மஇகா பேராக் மாநில துணைத் தலைவரும் நாட்டின் துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரியுமான சகோதரர் அர்வின் அப்பளசாமி இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டிற்கும் பொறுப்பேற்று, குளுவாங்கிலேயே முகாமிட்டுள்ளார். தவிர, தலைநகரைச் சேர்ந்த பிரபல கலைக்குழுவினர் படைக்கும் கலை-இசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெற இருக்கிறது.

எனவே, குளுவாங் பட்டணத்தைச் சேர்ந்த இந்தியர்கள், குறிப்பாக மக்கோதா தொகுதி இந்திய வாக்காளர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவரின் ஊடகச் செயலாளருமான எல்.சிவசுப்பிரமணியன் கேட்டுக் கொள்கிறார்.