கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக பதிப்பிக்கப்படும். அதன் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் துணையுடன் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மலாய் புத்தகமாக வெளியிடப்படும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் இலக்கியத்தை மொழியாக்கம் செய்து மலாய் நூலாக வெளியிட்டு, நம் சிந்தனை, எண்ணம், உரிமைக்குரல் ஆகியவற்றை இலக்கியத்தின் வழி, எல்லா இன மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்று சிறுகதைப் போட்டிக்கு, முன்னோட்டமாக சனிக்கிழமை ஆர்.டி.எம். அங்காசாபுரியில் நடைபெற்ற சிறுகதைப் பயிலரங்கை முடித்து வைத்து உரையாற்றிய மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
“நாமும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். நமது வாழ்வியல், நாம் எதிர்நோக்கும் சவால்கள் எல்லா இனமக்களையும் சென்று சேரவேண்டும். அதனை இலக்கியத்தின் வழி கொண்டு சேர்க்க முடியும். அதனை நோக்கி நான் எடுத்து வரும் முன்னெடுப்புகளுக்காக தீவிரமாக உழைக்க அரங்கம் நிறைந்து காணப்படும் இன்றைய நிகழ்வு புதிய உந்து சக்தி வழங்கி இருக்கிறது” என்றும் பலத்தக் கைத்தட்டலுக்கு இடையே மோகனன் தெரிவித்தார்.
இடைநிலைப்பள்ளி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், மூத்த எழுத்தாளர்கள் என 110 பேர் கலந்து கொண்டவர்களுக்கு முனைவர் இளம்பூரணன் கிராமணி சிறந்த சிறுகதைப் படைப்பது குறித்து பயிற்சி நடத்தினார்.
மின்னல் பண்பலையின் தலைவர் திருமதி ரோகினி சுப்ரமணியம் பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசினார். அவருக்கு சங்கத்தின் செயலாளர் பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.
இந்தச் சிறுகதைப் பயிலரங்கு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் போது சங்கத்திற்கு பலவகையில் உதவிய தொலைத்தொடர்பு துணையமைச்சர் மாண்புமிகு தியோ நி சிங் இந்திய பிரதிநிதி ரவின் அவர்களுக்கு சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் மாலை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
இச்சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொண்ட இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சங்கத்தின் நல்லுரையார் மன்னர் மன்னன் நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக பணியாற்றிய சங்கத்தின் செயலவை உறுப்பினர்களான திருமதி நித்தியவாணி மாணிக்கம், திருமதி நிர்மலாதேவி பன்னீர்செல்வம்,திருமதி லொவிஷிணா ராமையா ஆகியோருக்கு திருமதி ரோஹிணியும் துணைச்செயலாளர் ஆசிரியர் சபா கணேஷ் அவர்களுக்கு மோகனன் பெருமாளும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.