Home நாடு ஆனந்த கிருஷ்ணன்: வாரி வழங்குவதில் தாராளமும் தற்பெருமையும் கொள்ளாத பெருமகன் – நினைவுகூர்கிறார் பால்ய நண்பர்...

ஆனந்த கிருஷ்ணன்: வாரி வழங்குவதில் தாராளமும் தற்பெருமையும் கொள்ளாத பெருமகன் – நினைவுகூர்கிறார் பால்ய நண்பர் வைத்தியலிங்கம்

157
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த நவம்பர் 28-ஆம் தேதி காலமான முன்னாள் தொழிலதிபர் ஆனந்தா கிருஷ்ணனின் நெருங்கிய பால்ய நண்பர் டத்தோ அ. வைத்திலிங்கம் தாழ்மையும் தாராள குணமும் கொண்ட அரியதொரு மனிதர் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

மலேசிய புத்தம், கிறிஸ்துவம், இந்து, சீக்கிய, தாவோயிசம் மதங்களின் ஆலோசனை மன்றத்தின் (Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism and Taoism – MCCBCHST) முன்னாள் தலைவரான வைத்தியலிங்கம், ஆனந்த கிருஷ்ணனின் சமுதாய பங்களிப்புகள் பெரும்பாலும் முற்றிலும் விளம்பரங்களின்றி, பகிரங்க அறிவிப்புகள் இன்றி  மேற்கொள்ளப்பட்டன என்ற தகவலையும் பகிர்ந்தார்.

“எப்பொழுதும் அவர் – ‘எனது பெயரைக் குறிப்பிடாதீர்கள். எனது பங்களிப்புகள் ‘மலேசிய சமுதாயங்களுக்கான கல்வி அறவாரியம்’ (Malaysian Communities Educational Foundation-MCEF) அல்லது தனது மற்ற சில அறவாரியங்களின் மூலம் வந்தன என்று சொல்லுங்கள்’ என்பார்,” என்று வைத்தியலிங்கம்  நினைவுகூர்ந்தார்.

#TamilSchoolmychoice

“அவர் ஊடக வெளிச்சமும் பொதுமக்களின் பார்வையும் தன்மீது படாமல் வாழவும் நடந்து கொள்ளவும் விரும்புகிறேன்” என்று அவர் சமீபத்தில் கூறினார்.

இறுதிச் சடங்குகள் எளிமையாக நடைபெற விரும்பிய ஆனந்த கிருஷ்ணன்

ஆனந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் தனது இறுதிச்சடங்குகள் மிக எளிமையாக நடைபெற வேண்டுமென தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார் என்று நம்புகிறேன்,” என மலேசிய எய்ட்ஸ் மன்றத்தின் கௌரவ பொருளாளருமான வைத்தியலிங்கம் கூறினார்.

டத்தோ அ.வைத்தியலிங்கம்

ஆனந்த கிருஷ்ணனுடன் நெருங்கிய, ஆழமான நட்பு கொண்டிருந்த வைத்தியலிங்கம் 2000 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக மில்லினிய ஆன்மீக மாநாட்டிற்கு தான் செல்ல விரும்பியபோது அதற்கான பயணச்செலவை ஆனந்த கிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார் என்பதையும் நினைவுகூர்ந்தார்.

“நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாநாட்டில்  பங்கேற்பதற்கான செலவு சுமார் 16,000 அமெரிக்க டாலர். ஆனால் அவர் மற்ற ஐக்கிய நாடுகள் மன்ற தரப்பினர் தங்கும் உயர்ரக விடுதியில் என்னையும் தங்க வைத்தார். ஐக்கிய நாடுகள் மன்ற மாநாட்டில் பங்கேற்கச் செய்தார். இது அவரின் நட்பை எனக்கு உணர்த்திய ஓர் அற்புதமான சம்பவம்” என்றார் வைத்தியலிங்கம்.

1946-இல் தொடங்கிய நட்பு

வைத்தியலிங்கம் ஆனந்த கிருஷ்ணனை 1946 ஆம் ஆண்டில் முதன்முதலில் சந்தித்தார். அப்போது முதல் அவர்கள் நட்பு அடுத்த பல ஆண்டுகளில் மேலும் வலுப்பெற்றது. அவர்கள் இருவரும் பெரும்பாலும் பிரிக்பீல்ட்சிலுள்ள விவேகானந்தா ஆசிரமத்திற்கு சென்று, தமிழ் இதழ்கள் வாசித்தும் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடவும் செய்தனர்.

“அவர் எப்பொழுதும் அமைதியும் சாந்தமுமாக இருப்பார். சீக்கிரத்தில், எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்,” எனவும் வைத்தியலிங்கம் நினைவுகூர்ந்தார்.

1950-ஆம் ஆண்டுகளில் பிரிவு – 2000-ஆம் ஆண்டுகளில் மீண்டும் முகிழ்த்த நட்பு

வைத்தியலிங்கம் ஆசிரியர் தொழிலில் ஈடுபட, ஆனந்த கிருஷ்ணனோ அனைத்துலக வணிகத்தில் தீவிரம் காட்ட அவர்களுக்குள் 1950 ஆண்டுகளில் இடைவெளி ஏற்பட்டது. எனினும் 2000 ஆம் ஆண்டில் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பும் தொடர்பும் மேலும் வலுப்பெற்றது.

ஆனந்த கிருஷ்ணன், வைத்தியலிங்கத்தை மீண்டும் சந்திப்பதற்கு தனது செயலாளர் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது வைத்தியலிங்கம் மலேசிய புத்தம், கிறிஸ்துவம், இந்து, சீக்கிய, தாவோயிசம் மதங்களின் ஆலோசனை மன்றத்தின் (Malaysian Consultative Council of Buddhism) தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

ஆனந்தகிருஷ்ணன் வைத்தியலிங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நற்பணிகளுக்கு தனது ஆதரவை வழங்கினார் – ஆனால் ஒரு நிபந்தனையுடன்! தனது பெயர் எந்தக் காரணத்தையும் கொண்டு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

தனது மலேசிய சமுதாயங்களுக்கான கல்வி அறவாரியத்தின் மூலம் தனது உதவிகளைச் சேர்ப்பிக்குமாறு ஆனந்த கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். அந்த அறவாரியம் பல்வேறு இந்திய சமூகம் சார்ந்த இயக்கங்களுக்கும் ஆதரவளித்தது. பலதரப்பட்ட மதங்களைச் சார்ந்த அறக்காப்பாளர்களைக் கொண்ட வாரியம் அந்த அறவாரியத்தை நிருவாகம் செய்து வந்தது என்பதையும் வைத்தியலிங்கம் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டில் வைத்திலிங்கம் தன் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரையில் 16 ஆண்டுகள் மன்றத்தின் பணிகளுக்கு ஆனந்தகிருஷ்ணன் நிதியளித்துக் கொண்டிருந்தார்.