Home உலகம் தென் கொரிய அதிபரைக் கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது!

தென் கொரிய அதிபரைக் கைது செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது!

188
0
SHARE
Ad
யூன் சூக் இயோல்

சியோல்: சர்ச்சைக்குரிய வகையில் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர முயற்சி செய்த தென் கொரிய அதிபர் யூன் சூக் இயோல் மீதான கைது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

அதிபரின் பாதுகாப்பு படையினருடன் நடந்த ஆறு மணி நேர முற்றுகைக்குப் பிறகு, தெற்கு கொரியா காவல்துறையினர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் யோலை கைது செய்யும் முயற்சியைக் கைவிட்டனர்.

அதிகாலையில் அதிபரின் இல்லத்திற்கு வெளியே திரண்ட பெரும் எண்ணிக்கையிலான யூன் ஆதரவாளர்களாலும், பின்னர் அந்த வளாகத்திற்குள் அதிபரின் பாதுகாப்பு ஊழியர்கள் ஏற்படுத்திய மனித சுவர் தடையாலும் கைது நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 150 அதிகாரிகள், எண்ணிக்கையில் அதிபரின் ஆதரவாளர்களை விட மிகவும் குறைந்து காணப்பட்டனர்.

விசாரணைக்கு வரவேண்டுமென மூன்று முறை அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை யூன் புறக்கணித்ததை அடுத்து இந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நிறைவேற்ற காவல்துறையினர் முயற்சி செய்தனர்.

டிசம்பர் தொடக்கத்தில் ராணுவச் சட்டத்தை திணிக்க முயன்றபோது அதிகார விதிமீறல்கள் செய்ததற்காகவும், கலகத்தை தூண்டியதற்காகவும் தென் கொரிய அதிபர் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலை சியோல் நகர மையத்தில் உள்ள யூனின் இல்லத்திற்கு வெளியே பல காவல்துறை வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் விசாரணை அலுவலக (CIO) உறுப்பினர்களை கொண்ட கைது குழு உள்ளூர் நேரப்படி காலை 08:00 மணியளவில் அதிபர் இல்லத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்த நடவடிக்கை 20 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கி, விரைவில் சுமார் 150 நபர்களாகப் பெருகியது. அப்போதும் கூட, அவர்கள் எண்ணிக்கையில் யூன் ஆதரவாளர்களைவிட குறைவாகவே இருந்தனர்.

குழுவில் பாதி பேர் உள்ளே நுழைய முடிந்தது. எனினும் அதிபரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையிலும் அவரைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அதிபர் பாதுகாப்பு அதிகாரிகளுடனும், சியோல் நகரைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவப் பிரிவினருடனும் பல மணி நேரம் காவல் துறையினர் முட்டி மோதி நின்றனர். இறுதியில் பின்வாங்கினர்.