Home இந்தியா அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!

அயலகத் தமிழர் தினம் 2025 – மலேசியத் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்பு!

1312
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாடு அரசாங்கத்தால் கடந்த 4 ஆண்டுகளாகக்கொண்டாடப்பட்டு வரும் 2025-ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் தினம் மாநாட்டுக் கொண்டாட்டங்கள்  ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றன.

ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அயலகத் தமிழர் தினம் மாநாடு கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்த முறை நடைபெற்ற மாநாட்டில் மலேசியாவிலிருந்து அதிக அளவில் தமிழர்கள் கலந்து சிறப்பித்தத்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை (ஜனவரி 11) சென்னை வர்த்தக மையத்தில்இந்த மாநாட்டை தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி காலை 11.00 மணியளவில் அதிகாரபூர்வமாகத்  தொடக்கி வைத்தார்.

மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் கண்காட்சியையும் உதயநிதி அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அயலகத் தமிழர் தினம் குறித்து உதயநிதி பின்வருமாறு தன் முகநூலில் பதிவிட்டார்.

“மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலில், அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ நிகழ்ச்சிகளை சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஜனவரி 11) தொடங்கி வைத்தோம். மேலும், வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ்ச்சங்கங்கள் உள்ளிட்டவற்றின் அரங்குகளை பார்வையிட்டு அவர்களை வாழ்த்தினோம்.

வேர்களைத்தேடி விழுதுகள் வருவது போல, தாய்மடியைத் தேடி பிள்ளைகள் வருவது போல 50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அயலகத் தமிழர்கள் இச்சிறப்புக்குரிய நிகழ்வில் பங்கேற்க வருகை தந்திருக்கின்றனர்.

அயல் நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக, அரசுப் பொறுப்புகளில் உள்ளவர்களாக, நிறுவனங்களில் – தமிழ்ச்சங்கங்களில் பொறுப்புகளில் உள்ளவர்களாகத் திகழும் பல நூறு தமிழ் சான்றோரை ஒற்றைக் குடையின் கீழ் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம். தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களின் நலனுக்காக நம் திராவிட மாடல்_அரசு தீட்டியுள்ள திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றினோம். அயலகத்தமிழர்_தினவிழா வெல்லட்டும்!”

இந்த மாநாட்டில் மலேசியாவின் சார்பில் ம.இ.கா துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இந்தியர் விவகரங்களுக்கான சிறப்பு செயலாளர் சண்முகம் மூக்கன் சிறப்பு விருந்தினராக அயலக தமிழர் தின விழாவில் கலந்து கொண்டார்,

இவர்களைத் தவிர, பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன், பகாங் சபாய் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஆறுமுகம் ஆகியோரும் இந்த அயலக தமிழர் தின மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.