கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியுடன் தொடர்புடைய 4 பேர் 700 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் இஸ்மாயில் சாப்ரியின் கீழ் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சாப்ரி தனது பதவிக் காலத்தின்போது ஆகஸ்ட் 2021-இல் ‘கெலுவார்கா மலேசியா’ – மலேசியக் குடும்பம் – என்ற சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கான விளம்பரம், பிரச்சாரம் தொடர்பில், அதன் தொடர்பிலான குத்தகைகள் வழங்கப்பட்டது தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 3 நபர்களுக்கு பிப்ரவரி 21 தொடங்கி 5 நாட்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவை கீழமை நீதிமன்றம் (மாஜிஸ்ட்ரேட்) பிறப்பித்துள்ளது.
மேலும் ஒருவருக்கு 3 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப்பட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.