
கோலாலம்பூர்: மூன்று எரா எஃப் எம் (Era FM) வானொலி அறிவிப்பாளர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொலி குறித்து மேற்கொள்ளப்பட்ட காவல் துறை விசாரணை முடிவடைந்து, விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு (அட்டர்னி ஜெனரல்) அனுப்பப்பட்டதாக காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 73 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மொத்தம் ஆறு பேர் புதன்கிழமை (மார்ச் 5) விளக்கமளிக்க அழைக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
“விசாரணை முடிந்துவிட்டது, விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ளோம்,” என்று இன்று வியாழக்கிழமை (மார்ச் 6) அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் சமூக ஒற்றுமை, இன அல்லது மத இடையூறு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு ரசாருடின் எச்சரிக்கை விடுத்தார். அப்படி நடந்தால் “முறையான நடவடிக்கை எடுப்போம்,” என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தொடர்பாடல் மற்றும் மல்டிமீடியாச் சட்டத்தின் (CMA) பிரிவு 233ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 298ன் கீழ், குற்றவாளிக்கு அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
CMA பிரிவு 233ன் கீழ், குற்றவாளிக்கு அதிகபட்சம் RM50,000 அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், தண்டனை விதிக்கப்பட்ட பிறகு குற்றம் தொடர்ந்தால்,குற்றம் புரியப்பட்ட நாட்களில் ஒரு நாளுக்கு RM1,000 அபராதமும் விதிக்கலாம்.