
புத்ரா ஜெயா: நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 7-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான மருத்துவ விடுப்பு இன்னும் தொடர்கிறது. அதற்கான சான்றிதழை அவர் வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, அவர் எதிர்வரும் மார்ச் 13-ஆம் தேதிதான் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தன் வாக்குமூலத்தை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி இன்று வியாழக்கிழமை (மார்ச் 6) வெளியிட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் பாதுகாப்பு இல்லத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட RM177 மில்லியன் பணம் மற்றும் தங்கம் குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.
இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்கள் உள்ளிட்ட பதிமூன்று வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.
இஸ்மாயில் சாப்ரி பிரதமராக தலைமை வகித்த அரசாங்கத்தின் “மலேசியா குடும்பம்” விளம்பரப் பிரச்சாரத்திற்கான செலவினம் குறித்த ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேக நபராக உள்ளார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அசாமின் கூற்றுப்படி, இதுவரை 31 நபர்களிடம் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் பல அரசியல்வாதிகளும் அடங்குவர். ஆனால் அவர்களின் அடையாளங்களை அசாம் இதுவரை விவரிக்கவில்லை.
ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இஸ்மாயில் சாப்ரியின் முன்னாள் உதவியாளர்களுக்கு சொந்தமான கணக்குகள் உட்பட மொத்தம் சுமார் RM2 மில்லியன் கொண்ட 13 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் இஸ்மாயில் சாப்ரியின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மேலும் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முதலில் விளக்கும்படி இஸ்மாயில் சாப்ரியிடம் கேட்க விரும்புவதாக அசாம் தெரிவித்தார்.