Home Photo News ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள் யார்?

ஜசெக தேர்தல் : வெல்லப் போகும் இந்திய முகங்கள் – தமிழ் பேசும் தலைவர்கள் யார்?

87
0
SHARE
Ad
ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக்

(ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெறவிருக்கும் ஜசெக தேர்தல் குறித்தும் அதில் களமிறங்கும் இந்திய வேட்பாளர்கள் குறித்தும் தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)

கோலாலம்பூர் : பழைய கழிதலும் புதியன புகுதலும் – நம் வாழ்க்கையில் காணும் அனுபவப் பாடம் மட்டும் அன்று! அரசியல் கட்சிகளிலும் அவ்வப்போது இந்த சித்தாந்தம் பின்பற்றப்பட்டு புதிய இளம் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது உருவெடுப்பார்கள்!

நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) ஷா ஆலாமில் நடைபெறவிருக்கும் கட்சியின் 18-வது தேசியப் பேராளர் மாநாட்டை முன்னிட்டு நடைபெறவிருக்கும், ஜசெக கட்சித் தேர்தலும் அத்தகைய சித்தாந்தம் அரங்கேறப்போகும் களமாகத் திகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியின் கூட்டணியின் அங்கமான மஇகாவின் தலைவர்களைப் போன்று எதிர்க்கட்சியான ஜசெகவின் இந்தியத் தலைவர்களும் பிரபலமாக இருந்தார்கள்.

#TamilSchoolmychoice

கர்ப்பால் சிங், பி.பட்டு, வி.டேவிட் ஆகியோர் மறைவுக்குப் பின்னர், அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களாக கர்ப்பாலின் புதல்வர்கள் ராம்கர்ப்பால் சிங், கோபிந்த் சிங் டியோ, ஜக்டிப் சிங் ஆகியோருடன் பினாங்கில் பேராசிரியர் பி.இராமசாமி, பேராக்கில் எம்.குலசேகரன், சிவநேசன், சிவகுமார், நெகிரி செம்பிலானில் அருள்குமார், வீரப்பன், சிலாங்கூரில் கணபதி ராவ் என வரிசையாக பல இளம் தலைவர்கள் தலையெடுத்தார்கள்.

இன்றைய நிலையில் இராமசாமி கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்.குலசேகரன் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். எனவே, இந்திய சமூகம் சார்பாக குறிப்பாக தமிழ் பேசும் தலைவர்களாக நாளைய கட்சித் தேர்தல் மூலம் உருவெடுக்கப் போகும் தலைவர்கள் யார் என்ற விவாதங்கள் இந்திய சமூகத்தில் எழுந்துள்ளன.

தமிழ் ஊடகங்களிலும் இந்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வித்தியாசமான ஜசெக தேர்தல் நடைமுறைகள்

ஜசெக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட குலசேகரன்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்படுவது வேறு! தங்களின் சொந்தக் கட்சியிலேயே பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது வேறு! அதிலும் ஜசெக தேர்தல் களம் மலேசியாவின் மற்ற கட்சிகளில் இருந்து வித்தியாசம் கொண்டது.

தொகுதிகளின் தலைவர்கள் என்று ஜசெகவில் யாருமே எப்போதுமே பிரபலமாக இருந்ததில்லை. மாநிலம் என்று வரும்போது 15 மாநில செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குள் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேசிய நிலை என்று வரும்போது, 30 மத்திய செயவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிலும் அவர்களில் 9 பேர் மகளிராக இருக்க வேண்டும் என்பது கட்சியின் அமைப்பு சட்டவிதி.

இந்த முறை 9 இடங்களுக்காக 15 பெண்மணிகள் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்குப் பின்னர் ஒன்று கூடி, மேலும் 10 பேரை மத்திய செயலவைக்கான நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளலாம்.

இந்த 40 பேர்களும் அவர்களில் ஒருவரை,  தலைமைச் செயலாளராகவும் தலைவராகவும் தேர்ந்தெடுப்பர். அடுத்த 3 ஆண்டுகளுக்கு, 2028 வரை இந்த அணியினர்தான் ஜசெகவை வழிநடத்துவர்.

ஜசெகவைப் பொறுத்தவரை தலைமைச் செயலாளர் பதவிதான் அதிக அதிகாரபலம் வாய்ந்தது. தற்போது அந்தப் பதவியை அலங்கரிப்பவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அந்தோணி லோக். போக்குவரத்து அமைச்சராகவும் இருக்கிறார்.

நாளைய தேர்தலில் 70 பேர் போட்டியில் குதிக்கிறார்கள். லிம் குவான் அணியினர் மீண்டும் இந்தக் கட்சித் தேர்தலில் வென்று ஆதிக்கம் செலுத்துவார்களா என்பதுதான் சீன சமூகத்தில் எழுந்திருக்கும் கேள்வி!

வெல்லப்போகும் இந்தியத் தலைவர்கள் யார்?

வீ.கணபதி ராவ்

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, குலசேகரன் போன்றவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய இந்திய வேட்பாளர்களாக அருள்குமார், வீரப்பன், கணபதிராவ், சிவகுமார், ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.

கோபிந்த் சிங் டியோ, ராம்கர்ப்பால் சிங் இருவரும் நாளைய களத்தில் நிற்கும் மற்ற இரு இந்திய வேட்பாளர்கள். சொந்த செல்வாக்கு என்பதை விட, தங்களின் தந்தையார் கர்ப்பால் சிங்கின் பிரபல்யத்தின் நிழலில் ஜசெகவில் வலம் வரும் தலைவர்கள் இவர்கள். சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் கோபிந்த் சிங் தோல்வியடைந்தது அதற்கொரு சான்று!

கோபிந்த் சிங் டியோ

இந்த முறை ஜசெக தேர்தலில் முக்கிய பிரச்சார அம்சமே, வாரிசு அரசியலும், குடும்ப அரசியலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்! இந்த அணுகுமுறையின் தீவிரத்தால், கர்ப்பாலின் புதல்வர்களும் தோற்கடிக்கப்படக் கூடிய சாத்தியம் உண்டு!

எனவே, தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் இந்தியத் தலைவர் அல்லது தலைவர்கள் அடுத்த சில ஆண்டுகளுக்கு கட்சியின் செல்வாக்குமிக்க முக்கியத் தலைவர்களாகத் தலையெடுப்பர்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் மே மாதம் எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்திலும் இடம் பெறக் கூடிய சாத்தியம் உண்டு!

4 ஆயிரம் பேராளர்கள்!

லிம் குவான் எங்

கட்சித் தேர்தலுக்கு முன்பாக தலைவர் என்ற முறையில் லிம் குவான் தலைமையுரை ஆற்ற, தலைமைச் செயலாளர் என்ற முறையில் அந்தோணி லோக் உரையாற்றுவார். இந்த இருவரின் உரைகளுமே வாக்களிக்கப் போகும் பேராளர்களுக்கான இறுதிக்கட்ட செய்திகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1650 கிளைகளில் இருந்து 4,203 பேராளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஜசெக மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் பக்காத்தான் ஹாரப்பானின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முறையாகவும் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறுவதைக் கண்காணிக்க மூன்றாவது தரப்பாக, அனைத்துல கணக்காய்வு நிறுவனம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

(இரா.முத்தரசன்)