
கோலாலம்பூர்: ஜசெக கட்சியின் தேர்தல் வெப்பம் இன்றுடன் தணிந்து விடும். அடுத்து சூடுபிடிக்கப்போவது பிகேஆர் கட்சித் தேர்தல்கள். கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உதவித் தலைவருக்கான போட்டி கடுமையானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவித் தலைவருக்குப் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார்.
நடப்பு உதவித் தலைவரான நூருல் இசாவும் உதவித் தலைவர் பதவியைத் தற்காக்க மீண்டும் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார். கட்சித் தலைவர் அன்வாரின் மகளான நூருல் மீண்டும் எளிதாக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அன்வாரின் மகள் என்ற செல்வாக்கு ஒருபுறமிருக்க, கட்சியின் தொடக்க காலம் முதல் தன்னை தனித்துவமாக போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்தவர் நூருல். 2022 பொதுத் தேர்தலில் தன் தந்தையாரின் பாரம்பரியத் தொகுதியான பினாங்கு பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அவர் தோல்வியடைந்தது அவரின் அரசியல் பயணத்தில் ஒரு பின்னடைவு என்றாலும் கட்சியில் அவரின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நேற்று சனிக்கிழமை (மார்ச் 15) கோலாலம்பூரில் ரமடான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நூருல் உதவித் தலைவருக்குப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டார்.
பிகேஆர் கட்சிக்கான தொகுதி நிலையிலான தேர்தல்கள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து மே 3,4-ஆம் தேதிகளில் தேசிய நிலையிலான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.