
வாஷிங்டன் : ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் நிகழ்த்திய நீண்ட நேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, உக்ரேனின் எரிசக்தி ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளின் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்த ரஷியா ஒப்புக் கொண்டது. இந்தத் தகவலை வெள்ளை மாளிகையும் கிரெம்லினும் தெரிவித்தன. ஆனால், புடின் விரிவான போர்நிறுத்தத்திற்கு இன்னும் உடன்படவில்லை.
இது டிரம்ப் பதவியேற்ற பின்னர் இருவருக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது உரையாடல் ஆகும். இந்த உரையாடல், மூலம் டிரம்ப் ஆதரித்த மற்றும் உக்ரைன் ஏற்க முன்வந்த 30-நாள் போர்நிறுத்தத்துக்கு புதின் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக, இதற்கு பதிலாக, ஒரு குறுகிய அளவிலான இடைவெளியில் மட்டுமே போர்நிறுத்தம் அமலுக்கு வரும். அதாவது உக்ரேனின் ஆற்றல் நிலையங்களை தாக்குவதை இடைநிறுத்த ரஷியா ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மற்ற அம்சங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளைத் தொடர தொழில்நுட்ப குழுக்கள் பணியைத் தொடங்கும்.
முழுமையான போர்நிறுத்தத்திற்கு முன்பு, எரிசக்தி ஆற்றல் நிலைகளின் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரஷியா முன்வந்தது 2022 உக்ரேன் படையெடுப்பிற்கு பின்னர் முதன்முறையாக தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொள்ளும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது ரஷியாவுக்கும், உக்ரேனுக்கும் இருதரப்பிலும் பயனுள்ளதாக இருக்கலாம்.
உக்ரைனின் எரிசக்தி ஆற்றல் கட்டமைப்பு, புடின் படையெடுப்பின் மிகப்பெரிய இலக்குகளில் ஒன்றாகும். இதனால் நாடு கடுமையான குளிர்காலங்களிலும் அடிக்கடி மின்வெட்டுக்கு ஆளாகிறது. இதன் விளைவாக, உக்ரைன் நீண்ட தூர டிரோன்களை பயன்படுத்தி ரஷியாவின் எண்ணெய் தளங்களை குறிவைத்து தாக்க தொடங்கியது.