
பெய்ஜிங் : அமெரிக்காவுடனான வணிகப் போரில் சீனா சற்றும் பின்வாங்காமல் துணிச்சலுடன் நெஞ்சம் நிமிர்ந்து கம்பீரமாக எதிர்கொண்டு வருகிறது. மற்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், பல்வேறு மாற்று வியூகங்களை வகுத்து கூடுதல் வரிவிதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் கூடுதல் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு டிரம்பர் ஒத்திவைத்திருப்பதால் பல உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன. மலேசியாவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது அரசாங்கத் தரப்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைப்பு காட்டி வருகிறது.
சீனாவும் தன் பார்வையை இப்போது ஆசியான் நாடுகள் பக்கம் திருப்பியுள்ளது. ஆசியான் நாடுகளுடன் எப்போதுமே நட்பு பாராட்டி வந்திருக்கும் சீனா, ஆசியானுடனான கலந்துரையாடல் பங்காளி நாடாகவும் பல்லாண்டுகளாக இருந்து வருகிறது.
நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு ஆசியான் வட்டாரத்தின் 3 முக்கிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த ஆண்டில் ஜின் பெங் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டுப் பயணம் என்பதுடன் அமெரிக்காவுடனான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் வருகையை மேற்கொள்வதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 586.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களை ஆசியான் நாடுகள் இறக்குமதி செய்தன. வியட்னாம் 161.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களை இறக்குமதி செய்து ஆசியான் நாடுகளில் மிக அதிகமாக சீன இறக்குமதியைப் பெற்ற நாடாகத் திகழ்கிறது. அதற்கு அடுத்த நிலையில் 101.5 பில்லியன் டாலர் மதிப்புடைய இறக்குமதிகளை மலேசியா சீனாவிடம் இருந்து பெற்றது.
ஜீ ஜின் பெங் திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் வியட்நாம் வருகையை மேற்கொள்வார். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) மலேசியா வந்தடையும் ஜின் பெங் வியாழக்கிழமை வரை மலேசியாவில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
வியாழக்கிழமையன்று கம்போடியாவுக்கு செல்கிறார் ஜின் பெங்.சீனாவுடன் மிக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருக்கும் நாடு கம்போடியா. ஆசியானிலும் ஓர் உறுப்பிய நாடு.
சீன இறக்குமதிப் பொருட்களை மிக அதிக அளவில் பெறும் ஒரே நாடு அமெரிக்கா. அதனுடனான வணிகப் போரைத் திசை திருப்ப ஆசியான் நாடுகளின் பக்கம் ஜின் பெங் கவனத்தைச் செலுத்துவதாக அனைத்துலகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.