சென்னை: இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். சைவ, வைணவ சமயங்களை விலைமாது கூறுகின்ற வாசகங்களுடன் ஒப்பிட்டும், பெண்களை இழிவாகவும் விமர்சித்து மேடையில் உரையாற்றிய மற்றொரு தமிழ் நாடு அமைச்சர் பொன்முடியும் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான பிணை (ஜாமீன்) வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 6 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கடுமையான குறைகூறல்கள் எழுந்து வருகின்றன.
பொன்முடிக்கு எதிராகத் தமிழ் நாடெங்கும் அதிமுகவும், பாஜகவும் மற்ற அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. சில மகளிர் தரப்புகளும் பொதுநலக் குழுக்களும் கூட கடும் கண்டனங்களை பதிவு செய்தன.
வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த செந்தில் பாலாஜி இன்று திங்கட்கிழமைக்குள் (ஏப்ரல் 28) பிணை வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்துதான் செந்தில் பாலாஜி பதவி விலகியுள்ளார்.
இதற்கிடையில், சிலமாதங்களுக்கு முன்னர் ஸ்டாலினால் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகியுள்ளார்.