
வத்திகான்: சில சுற்றுகள் நடைபெற்ற வாக்கெடுப்புகளுக்குப் பின்னர் இறுதியாக புதிய போப்பாண்டவர் நேற்று வியாழக்கிழமை (மே 8) தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைக் குறிக்கும் வண்ணம் வத்திகான் தேவாலயத்தின் புகைக் கூண்டில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.
அமெரிக்காவின் சிக்காகோவைச் சேர்ந்த 69 வயது, கார்டினல் ரோபர்ட் பிரிவோஸ்ட் என்பவர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய போப்பாண்டவர் ஆவார். கத்தாலிக்க மத நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முனைந்த முன்னாள் போப்பாண்டவர் பிரான்சிசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பிரிவோஸ்ட்டும் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
267-வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரிவோஸ்ட் பல ஆண்டுகள் தென் அமெரிக்க நாடான பெருவில் மதச்சேவை ஆற்றியவராவார். அமெரிக்கா-பெரு ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை அவர் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அவரும் தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். காலமான முன்னாள் போப் பிரான்சிசும் தென் அமெரிக்கக் கண்டத்தின் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்தான்.
புதிய போப் ‘லியோ 14’ என்ற அடைமொழியைக் கொண்டவராக இனித் திகழ்வார்.