புத்ரா ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று திங்கட்கிழமை (மே 26) வழக்கம்போல் தனது அதிகாரத்துவ அமைச்சுப் பணிகளுக்குத் திரும்பினார் என அவரின் ஊடகச் செயலாளர் பார்ஹான் இக்பால் தெரிவித்தார்.
துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தால் பொருளாதார அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவேன் என ரபிசி ரம்லி அறிவித்திருந்தார்.
எனினும் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டு நிகழ்ச்சிகளின்போது தன் பதவியை ராஜினாமா செய்து ஊடகங்களின் கவனத்தைத் திசை திருப்பக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் எந்த முடிவையும் இப்போது எடுக்கவில்லை எனக் கருதப்படுகிறது.
பிகேஆர் கட்சிக்கான துணைத் தலைவர் போட்டியில் 9,803 வாக்குகள் நூருல் இசாவுக்குக் கிடைத்த நிலையில் ரபிசி ரம்லிக்கு 3,866 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்த முடிவுகளைத் தொடர்ந்து ரபிசி வாக்குறுதி அளித்தபடி அமைச்சர் பதவியைத் துறப்பாரா? அல்லது மனதை மாற்றிக் கொண்டோ, அன்வார் இப்ராகிமின் வற்புறுத்தலாலோ தொடர்ந்து அமைச்சுப் பொறுப்பில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் ரீதியாகவும் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது. அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெறுவாரா? தற்காலிகமாக விடுமுறையில் செல்வாரா? பிகேஆர் கட்சியிலேயே தொடர்வாரா? வேறு கட்சியில் இணைவாரா? புதிய கட்சியைத் தொடங்குவாரா? எனப் பல்வேறு கேள்விகள் ரபிசி ரம்லியைச் சுற்றிச் சுழன்று வருகின்றன.