
வாஷிங்டன்: ஆண்டாண்டு காலமாக அமெரிக்க அரசியலை இரண்டே இரண்டு கட்சிகள்தான் மையமிட்டிருக்கின்றன. ஒன்று குடியரசுக் கட்சி – ஆங்கிலத்தில் ரிபப்ளிக்கன் பார்ட்டி. மற்றொரு ஜனநாயகக் கட்சி – டெமோக்ரேடிக் பார்ட்டி. மற்ற அரசியல் கட்சிகள் செயல்பட்டாலும், அவை ஒரு தொகுதியைக் கூட வென்றதில்லை.
உலகின் முதல் நிலை பணக்காரர் எலென் மஸ்க் தனது நெருங்கிய நண்பர் அதிபர் டிரம்புடன் முரண்பாடு கொண்டு ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை-நிரந்தரப் பகைவர்களும் இல்லை – என்ற முதுமொழிக்கேற்ப, ஒரு காலத்தில் டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்து இன்று அரசியல் பகைவராக மாறியிருக்கிறார் எலென் மஸ்க்.
எக்ஸ் தளத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் 80% பேர் இந்த யோசனைக்கு ஆதரவளித்தனர்.
எலென் மஸ்க், “இரண்டு அரசியல் கட்சிகளிலும் சேர விருப்பமில்லாமல் நடுநிலை வகிக்கும் 80% பேரை பிரதிநிதித்துவப்படுத்த அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்சி தேவை” என்று அறிவித்தார்.