கோலாலம்பூர், மே 27 – கடந்த வாரம் தடுப்புக் காவலலில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து மௌனம் காத்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் மற்றும் துணையமைச்சரான வேதமூர்த்தியின் செயலைப் பார்க்கும் போது,
ஹிண்ட்ராப் இயக்கத்தின் கோட்பாடுகளில் ஒன்றான தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவது பற்றிய கோரிக்கையை அரசாங்கத்திடம் விட்டுக்கொடுத்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மே 21 ஆம் தேதி என்.தர்மேந்திரன் என்ற இந்தியர் ஒருவர் காவல்துறை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மர்மமான முறையில் இறந்தார்.
அவரது உடலில் சித்திரவதை செய்ததற்கான ஆதாரங்கள் பிரேதப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இது இவ்வருடத்தில் நடக்கும் 5 ஆவது தடுப்புக் காவல் மரணம் ஆகும்.
அதோடு கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இதுவரை 218 இந்தியர்கள் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர்.
மேலும் “தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவது மலேசிய இந்தியர்கள் மத்தியில் ஆறாத் துயரமாக உள்ளது. இது போன்ற தொடர் மரணங்கள் மலேசியாவில் வாழும் இந்தியர்களின் உயிரின் மதிப்புக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அதோடு இது ஒரு தேச அவமானம் ஆகும்” என்று குலசேகரன் தெரிவித்துள்ளார்.
“ஹிண்ட்ராப்பின் திட்ட அறிக்கையில் தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவது தடுக்கப் பட வேண்டும் என்பது முக்கிய அங்கமாக உள்ளது. ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் ஹிண்ட்ராப்பின் கோட்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாகக் கூறி இன்று துணையமைச்சராகவும் பதவி ஏற்றுள்ள வேதமூர்த்தி, அமைச்சரவைப் பதவிக்காக இயக்கத்தை விற்றுவிட்டார் என்று அவர் மீது மக்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
அதற்கேற்றார் போல் வேதமூர்த்தியும் இவ்விவகாரம் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்.” என்றும் குலசேகரன் தெரிவித்துள்ளார்.