சென்னை,பிப்.4-முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் வெளியிடும் வேலையை முடுக்கியிருந்தார் கமல்ஹாசன்.
ஆட்சேபம் தெரிவித்த 7 காட்சிகளை நீக்கியும், சில காட்சிகளை மியூட் செய்தும் படம் வெளியாகிறது. அந்த தேதியை கமல் அறிவித்துள்ளார்.
சென்ற மாதம் 11ஆம் தேதி வெளியாவதாக இருந்த படம் தமிழக முஸ்லீம் தலைவர்களின் எதிர்ப்பு காரணமாக பல்வேறு தடைகளை சந்தித்தது. இதற்குள் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் எவ்வித காட்சி நீக்கமும் இன்றி வெளியிடப்பட்டு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் 7 தினங்களில் 54 கோடிகள் அளவுக்கு படம் கலெக்சன் செய்யவும் செய்தது.
சென்ற வாரம் இந்தியில் 600 திரையரங்குகளுக்கு மேல் வெளியான படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அசம்பாவிதம் ஏதுமின்றி வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழகத்தில் மட்டும் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 7 கட், சில காட்சிகள் மியூட் என்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வெளியாகிறது.
வரும் 7ஆம் தேதி விஸ்வரூபம் தமிழகத்தில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்ற வாரம் வெளியான கடல், டேவிட் இரண்டும் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்ததால் இவ்விரு படங்களையும் மாற்றிவிட்டு விஸ்வரூபத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.