கெய்ரோ, ஜூலை 5- எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக தொடர்ந்து அரியணை ஏறினர்.
1953-ம் ஆண்டு அரச குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டு, எகிப்து நாடு குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. 1939-ம் ஆண்டு ஈரான் இளவரசர் முகமது ரெசா பாலவியை பாவ்சியா மணந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1945-ல் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து 1949-ம் ஆண்டு எகிப்து நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரியை மணந்த பாவ்சியா எகிப்திலேயே தங்கியிருந்தார். எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் மரணம் அடைந்த பாவ்சியாவின் உடல் கெய்ரோவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்து உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.