கோலாலம்பூர், ஜூலை 8 – ரத்து செய்யப்பட்ட அவசரகால சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிறு குழந்தை போல் அடம்பிடித்து வரும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர், தனது பேச்சை நிறுத்திக்கொள்வதோடு, காவல்துறையின் விசாரணைத் திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்கட்சியைச் சேர்ந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறியுள்ளார்.
மேலும், “காவல்துறை ஆதாரங்களைத் தேடுவதில் தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்ற பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் ஆலோசனைக்கு காலிட் செவி சாய்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, காலிட் அபு பக்கரும், உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியும் அவசரகாலச் சட்டம் மீண்டும் நாட்டிற்குத் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குறிப்பிட்ட டோனி புவா, அவசரகால சட்டத்தால் இதற்கு முன்பு பல அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்தேறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அவசர காலச் சட்டத்தின் படி, சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து தடுப்புக் காவலில் வைப்பதற்குப் பதிலாக, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் நிறுவதற்கு முன் தகுந்த ஆதாரங்களை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ரசாக் அரசாங்கக் கல்லூரியில், அரசாங்க ஊழியர்களுக்கு முன் உரையாற்றிய போது நஜிப் கூறியதை, டோனி புவா மேற்கோள் காட்டினார்.