கெய்ரோ, ஆக. 16- எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கலைக்க நேற்று முன்தினம் ராணுவம் முற்பட்டது.
அப்போது பாதுகாப்பு படைக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் ஆதரவாளர்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலில் இதுவரை 638 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரின் நிலைமை மோசமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க அஞ்சப்படுகிறது.
இந்த வன்முறையில் ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து எகிப்தில் அவசரநிலை பிரகடனம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசுப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட இந்த ரத்தகளறி குறித்து விவாதிக்க ஐ.நா. சபையின் ரகசிய அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து நேர்மையான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கா-எகிப்து ராணுவ கூட்டுப் பயிற்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு எகிப்துக்கு ஆண்டு தோறும் 1.3 பில்லியன் டாலர்களை ராணுவ உதவியாகவும், 250 மில்லியன் டாலர்களை இதர வகையிலான நிதி உதவியாகவும் வழங்கி வருகிறது.
முஹம்மது மோர்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்து ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமாக போலீசார் சுட்டுக் கொன்று குவித்து வருவது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்துக்கு தனது கண்டனத்தை சரியான வகையில் பதிவு செய்யும் விதமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்கா-எகிப்து கூட்டு ராணுவ பயிற்சியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எகிப்துடன் ஆன உறவுகளை நாங்கள் தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.
எனினும், உரிமைகளுக்காக போராடும் மக்களை வீதிகளில் சுட்டுக்கொன்று குவித்துவரும் நிலையில் எப்போதும் போல் உறவுகளை தொடர முடியாது.
மோர்சியின் ஆதரவாளர்களனி பழிக்கு நாங்கள் ஆளாகி வரும் அதே வேளையில் மற்றொரு தரப்பினரும் நாங்கள் மோர்சியை ஆதரிப்பதாக கருதுகின்றன.
எகிப்தில் அமைதியான, வளமான, ஜனநாயக சூழ்நிலை நிலவுவதையே நாங்கள் விரும்புகிறோம்.
எகிப்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையால் அந்நாட்டுடனான உறவுகள் தொடர்பாக மறுசிந்தனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எகிப்தின் இடைக்கால அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பதை சீராய்ந்து அந்நாட்டுடன் அமெரிக்காவின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அறிக்கை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.