கோலாலம்பூர், செப்டம்பர் 1 – ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான நியமனத் தாக்கல் இன்று காலை 10 மணியளவில் ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் 617 நியமனங்களோடு பேராதரவைப் பெற்று ம.இ.கா தேசியத் தலைவராக மீண்டும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை இன்று ம.இ.கா தேசிய தேர்தல் குழுத் தலைவரான டான்ஸ்ரீ க.குமரன் வெளியிட்டார்.
அதன்படி, “ம.இ.கா அமைப்புவிதி 58.3 மற்றும் 58.1.2 ன் கீழ் மலேசிய இந்திய காங்கிரஸின் தேசிய தேர்தல் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நான், அமைப்பு விதி 52.58.2 ன்படி அடுத்த மூன்று ஆண்டு தவணைக்கு அல்லது அடுத்த தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் வரை ம.இ.கா வின் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இருப்பார் என்று ஏகமனதாகப் பிரகடனப்படுத்துகின்றேன்” என்று அங்கு கூடியிருந்த 1500 க்கும் மேற்ப்பட்ட கட்சி உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் குமரன் அறிவித்தார்.
ஒவ்வொரு வேட்பாளர் நியமனத்திலும் 6 கிளைத் தலைவர்கள் ஆதரவுக் கையெழுத்திட வேண்டும் என்பதால், இன்றைக்கு கிடைத்த வேட்பாளர் நியமனங்கள் மூலம், மொத்தமுள்ள சுமார் 4,000 கிளைகளில் 3,702 கிளைத் தலைவர்களின் ஆதரவை பழனிவேல் பெற்றிருக்கின்றார்.