கோலாலம்பூர், அக் 11 – குற்றவாளிகளை முதலில் சுட்டுத்தள்ளுவோம் பிறகு தான் விசாரணை என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பயங்கர குற்றவாளிகளைத் துடைத்தொழிக்கவும் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”
“காவல்துறையினரை நோக்கி ஒரு குற்றவாளி சுடுவதற்குள் அந்த குற்றவாளியை சுட்டுக்கொல்வதில் தவறு இல்லை. எனினும் அவ்வாறு காவல்துறை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும் சரியான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.”
“காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கண்டபடி யாரைவேண்டுமானாலும் சுடக்கூடாது. தவறு செய்யாதவர்கள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது.அதே நேரத்தில், பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பி விடக்கூடாது.” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.