Home நாடு இருட்டறையில் 13 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன்! சிறையில் பாதுகாப்பு இல்லை! – உதயகுமார்

இருட்டறையில் 13 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டேன்! சிறையில் பாதுகாப்பு இல்லை! – உதயகுமார்

543
0
SHARE
Ad

uthayakumarகோலாலம்பூர், அக் 25 – தேச நிந்தனை வழக்கின் மேல்முறையீட்டிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது உதயகுமார் கூறியதாவது:-

“என் நிலை குறித்து எழுதிய பத்திரிக்கைகள் அனைத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கையில் எனது செய்தி வந்த மறுநாளே என்னை இருட்டறையில் இருந்து வேறு அறைக்கு மாற்றினார்கள். ஆனால் பத்திரிக்கையில் வந்த அந்த செய்தி குறித்து இரண்டு சிறை அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தவுள்ளனர். தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டாலும் நான் பாதுகாப்பாக உணரவில்லை. காரணம் நான் இருப்பது பயங்கரக் குற்றங்கள் செய்த கைதிகள் இருக்கும் சிறை”

#TamilSchoolmychoice

“என்னைப் போல் வேறு எந்த தலைவரையும் இது போன்ற சிறையில் இதுவரை வைத்ததில்லை. வைக்கவும் கூடாது. ஆனால் நான் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் இந்த நிலமை என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நான் இப்போது இருக்கும் சிறையில், கைதிகளுக்குள் நடந்த கடும் வாக்குவாதத்தில் சண்டை ஏற்பட்டு, பரமேஸ்வரன் என்பவருக்கு தலை, கண், மூக்கு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.”

“இது மாதிரியான பயங்கரவாதிகள் இருக்கும் சிறை பாதுகாப்பானதா? என்னை சிறை மருத்துவக்கூடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனக்கு நீரிழிவு நோய் உள்ள காரணத்தினால் டயட் உணவு கொடுக்க ஆரம்பத்தில் ஆணையிடப்பட்டாலும், தற்போது வரை அது போன்ற உணவுகள் தரப்படுவதில்லை.”

“முதுகு தண்டுவடப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உள்ளது போல் கட்டில் கேட்டேன். ஆனால் அதையும் சிறை நிர்வாகம் தரமறுத்து மெல்லிய மெத்தை ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். 13 நாட்கள் இருட்டறையில் இருந்த போது, என் உடல் எடை 5 கிலோ குறைந்துவிட்டது. என்னை எனது வழக்கறிஞர் பார்க்க வரும் போது முக்கிய ஆவணங்கள் சிலவற்றை எடுத்து வருகிறார். ஆனால் அதையும் சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. எந்த சட்டத்திலும் இது போன்ற வரைமுறை இல்லை” இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.

உதயகுமாரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என்று இவ்வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.