புதுடெல்லி, டிசம்பர் 24- இந்திய பெண் துணை தூதர் தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளே அவசர அவசரமாக விமான பயணச் சீட்டு வாங்கி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணிப் பெண்ணை போலி விசாவில் அழைத்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தூதர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சதி நடைபெற்று இருப்பதாக இந்தியா எழுப்பிய புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தேவயானி வீட்டில் பணி புரிந்து வந்த சங்கீதா திடீரென மாயமானதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதை கண்டு கொள்ளாத அமெரிக்கா, அவரது குடும்பத்தினர் அமெரிக்கா திரும்புவதற்கு விசா வழங்கியதோடு, மீண்டும் இந்திய திரும்ப விமான பயணச் சீட்டை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
பணிப் பெண் சங்கீதா குடும்பத்தினர் தாயகம் திரும்பிய இரண்டாவது நாளில் தேவயானி கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவருக்கு அவ்வளவு விசா வழங்கிடாத அமெரிக்கா, பணிப் பெண் குடும்பத்தினருக்கு இலவச விமான பயணச் சீட்டுகளை அளித்திருப்பது இந்தியாவின் சந்தேகதத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த முயற்சி எடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.