காஜாங், பிப் 28 – சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம், மத்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தன்னை வீழ்த்தும் நோக்கத்தில் அல்ல என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிலாங்கூர் குடிநீர் விநியோகம் தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன், காலிட் ஒப்பந்தம் செய்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக மட்டுமே காலிட் கூறினார்” என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அது சிலாங்கூர் மாநில குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் இருக்கும். மாறாக என்னை கவிழ்ப்பதற்காக செய்யப்பட்டிருக்காது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தற்போது குடிநீர் விநியோகம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. காரணம் நேற்று முந்தினம் காலிட் இப்ராகிம், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
காஜாங் இடைத்தேர்தலில், அன்வாரை வீழ்த்துவதற்கு காலிட் செய்யும் திட்டம் தான் இது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் தெரிவித்தார்.