Home நாடு MH 370 – நஜிப் அரசாங்கம் தனது பலவீனங்களை மறைக்க என்மீது பழி போடுகின்றது –...

MH 370 – நஜிப் அரசாங்கம் தனது பலவீனங்களை மறைக்க என்மீது பழி போடுகின்றது – அன்வார் குற்றச்சாட்டு!

466
0
SHARE
Ad

Anwarமார்ச் 18 – காணாமல் போன மாஸ் விமான விவகாரத்தில் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் செயல்படும் பிரதமர் நஜிப்பும் அவரது அரசாங்கமும் உலகின் கவனத்தைத் திசை திருப்பவும், தங்கள் மீது சுமத்தப்படும் குறைகூறல்களை மூடி மறைக்கவும் என்னைக் குறி வைத்து தற்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், அன்வார், விமானத்தைச் செலுத்திய விமானி சஹாரி தனது ஆதரவாளர் என்றும் தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்து கோபம் கொண்டிருந்தார் என்றும் ஆகக் கடைசியாக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து கருத்துரைத்தார்.

“இந்த மாதிரியான குறை கூறல்களை விமானி மீது சுமத்துவது முறையல்ல. அவரது குடும்பத்தின் உறுப்பினர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அவரை நான் சில அரசியல் கூட்டங்களில் சந்தித்திருக்கலாம். இப்போதுதான் அவர் எனது பிகேஆர் கட்சியின் கட்டணம் செலுத்தும் முறையான உறுப்பினர் என்ற தகவலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது” என்று அன்வார் கூறினார்.

அன்வாரின் நேர்காணலை அனைத்துல அலைவரிசையில் சிஎன்என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், ஆஸ்ட்ரோவின் மூலமாக ஒளிபரப்பாகும் சிஎன்என் அலைவரிசையிலும் அன்வாரின் இந்த நேர்காணல் ஒளிபரப்பப்பட்டதா என்பது தெரியவில்லை.

காணாமல் போன விமான விவகாரத்தை ஆரம்பம் முதல் நஜிப் அரசாங்கம் முறையாகக் கையாளவில்லை என்றும், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார். தங்களின் சொந்த தோல்விகளையும், பலவீனங்களையும், இயலாத் தன்மையையும் மூடி மறைக்க தற்போது என்னைச் சம்பந்தப்படுத்தி இந்த விவகாரத்தைத் திசை திருப்ப முனைந்துள்ளார்கள் என்றும் அன்வார் கூறினார்.

விமானத்தைச் செலுத்துவதற்கு முன்னர் விமானி சஹாரி, புத்ரா ஜெயாவில் நடைபெற்ற அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் கலந்து கொண்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.